டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், தரைப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்தின் இடைக்காலத் தலைவராக முகம்மட் இசா அப்துல் சமட் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அமைச்சரவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தவறினால் நாடாளாவிய முறையில் ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்றும் எச்சரித்தார்.
ஜூன் 19-இல், புத்ரா ஜெயா ஃபெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) தலைவராக இருந்த இசாவை ஸ்பாட்டுக்கு மாற்றுவதாக அறிவித்தது.
இசாவை ஸ்பாட்டின் இடைக்காலத் தலைவராக்கியதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜிஎல்சி தலைவர் நியமனங்களிலேயே மிகவும் மோசமான நியமனம் இதுதான் என்பதைப் பிரதமரும் அமைச்சரவையும் உணர வேண்டும் என லிம் கூறினார்.
அமைச்சரவை இசா ஸ்பாட்டின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை இரத்துச் செய்யும் தார்மீக, அரசியல் துணிச்சலற்றதாக இருக்குமானால், நாடு முழுக்க இசாவின் நியமனத்துக்கு எதிரான எதிர்ப்பு வலுவடைந்து அது தேசிய இயக்கமாக மாறுவதை 36 அமைச்சர்களும் காண்பார்கள். அம்னோ அல்லது பாரிசான் நேசனலின் ஊழலால் வெறுப்படைந்துள்ள மக்கள் அதற்கு ஆதரவளிப்பர் என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இதெல்லாம் நீ என்னை சொறி நான் உன்னை சொறிகிறேன் என்ற வழி முறை. அந்த குட்டையில் ஊறிய மட்டைகளுக்குத்தான் தெரியுமே எப்படி எங்கு சுருட்டுவது என்று? குண்டர் கும்பலுக்கா தெரியாது?