அகதிகளின் இளவரசி, எலிசபெத் அரசியின் விருது பெறுகிறார்

 

Princessஅகதிகளுக்கு உதவுவதற்காக தமது 18 ஆவது வயதில் ஓர் அரசுசார்பற்ற அமைப்பைத் தோற்றுவித்த ஹெய்டி குவா அவர் மலேசிய சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைக்காக பிரிட்டீஷ் அரசி எலிசபெத் II வழங்கும் இளந்தலைவர்கள் விருது பெறுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

லண்டனுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மலேசியாகினி குவாவை சுபாங்ஜெயாவில் சந்தித்து நேர்காணல் நடத்தியது.

அவருடன் இருக்கையில், அவருக்கு வந்த கைத்தொலைபேசி அழைப்புகள் எண்ணற்றவையாக இருந்தன. அதில் ஒன்று, பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு. லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்பு அவர் பிரதமரைச் சந்திக்க முடியுமா என்று கேட்கப்பட்டார். அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை குவா விளக்கினார்.

கோமன்வெல்த் நாடுகளில் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு அச்சமுதாய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும் இளந்தலைவர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களைக் கொண்டாடுவது எலிசபெத் அரசியின் இளந்தலைவர்கள் விருது.

இவ்வாண்டின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட ஒரே மலேசியரான ஹெய்டி குவா, அகதிகளுக்கான இடர்க்காப்பிடம் (Refuge for The Refugees (RFTR)) என்ற அமைப்பின் வழி ஆற்றிய சேவைக்காக இந்த விருதைப் பெறுகிறார்.

ஹெய்டி குவாவும் அவரது தோழி அண்டிரியா பிரிஷாவும் ஐந்தாம் படிவ படிப்பை முடிக்கும் தறுவாயில் இருக்கும் போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆர்எப்டிஆர் என்ற அரசு சார்பற்ற அமைப்பைத் தொடங்கினர்.

அவர்கள் இருவரும் ஒரு மியன்மார் அகதிகளுக்கான பள்ளியில் ஆங்கிலமொழி போதிக்கும் தன்னார்வல ஆசிரியர்களாக சேர்ந்தனர். மிகக் குறுகிய காலத்தில், நிதி பற்றாக்குறையினால் அப்பள்ளி மூடப்படும் நிலையை எட்டியது.

தாம் மேல்படிப்பிற்குச் செல்லப் போகும் நிலையில் இருக்கும் போது, மலேசியாவில் முறையான கல்விக் கற்க தகுதி பெறாத இந்தக் குழந்தைகள், தங்களுக்குக் கல்வி கற்க கிடைத்த இந்த வாய்ப்பையும் இழக்கப் போகிறார்களே என்று ஹெய்டி வருந்தினார்.

பள்ளிக்கூடம் என்று கூறப்படும் அந்த இடம் இரண்டு மலிவு விலை அடுக்கு வீடுகளைக் கொண்டதாகும். அவற்றின் அறைகளுக்கு சூரிய ஒளிதான் வெளிச்சம்.

எப்படியாவது அப்பள்ளியைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற துடிப்பில், நிதி திரட்டு வதற்கு இரண்டு வாரகால அவகாசம் தரும்படி தலைமையாசிரியரை ஹெய்டி கேட்டுக்கொண்டார். ஆனால், எடுத்துக்கொண்ட முயற்சி எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இறுதியில், அவர்கள் இருவரும் முகநூலை நாடினர். அவர்கள் படித்துக் கொடுக்கும் பிள்ளைகளின் கதையைப் பகிர்ந்து கொண்டனர். மக்கள் ஆதரவு கொடுத்தனர்.

ஒரு வாரத்திற்குள், ஹெய்டியும் பிரிஷாவும் பள்ளிக்கூடத்தைப் பல மாதங்களுக்கு நடத்துவதற்கு போதுமான நிதியைத் திரட்டுவதில் வெற்றி பெற்றனர்.

இக்காலக்கட்டத்தில், மலேசியாவில் 186 அகதிகளுக்கான பள்ளிக்கூடங்கள் இருப்பதையும் அவற்றுக்குப் போதுமான நிதி மற்றும் ஆதரவு இல்லாதிருப்பதையும் அவர்கள் இருவரும் கண்டறிந்தனர்.

ஹெய்டியும் பிரிஷாவும் 18 வயதை அடைவதற்காக சில வாரங்கள் காத்திருந்தனர். ஓர் அமைப்பை பதிவு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 18 ஆகும். பின்னர், ஆர் எப்டிஆரை பதிவு செய்தனர்.

 

விழுப்புணர்வும் ஆதரவும்

 

அப்பள்ளிக்காக நிதி திரட்டுகையில், நாட்டிலுள்ள அகதிகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

பெற்றோர்களின் உதவியோடு, வியாபார மையங்கள் மற்றும் நகரிலுள்ள பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கூடாரங்கள் போட்டு மக்களுக்கு அகதிகளின் அவலநிலையை அவர்கள் விளக்கினர்.

இதன் வழி அவர்கள் கண்ட ஆச்சரியமான தகவல், “என்ன, மலேசியாவில் அகதிகள் இருக்கிறார்களா?”, என்று பலர் கேட்டதை ஹெய்டி நினைவுகூர்ந்தார்.

ஒவ்வொன்றாக, அகதிகளின் பள்ளிகள் ஆர்எப்டிஆரின் உதவியை நாடி வந்தன.

ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆர்எப்டிஆர் 35 பள்ளிகளுக்கு ஆதரவும் 2,000 க்கு மேற்பட்ட அகதியான குழந்தைகளுக்கு பராமரிப்பும் வழங்கிறது.

பெரும்பாலான மாணவர்கள் மியன்மார் நாட்டினர். அவர்களுக்கு பலவிதமான உதவிகள் வழங்கப்படுவதாக ஹெய்டி கூறினார்.

எப்படிச் செய்வது என்று அவர்களுக்கு உத்தரவிடுவதைவிட அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார் ஹெய்டி.

பள்ளிக்கூட ஆசிரியர்கள் அனைவரும் அகதிகள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தேவைப்படும் மேசை, நாற்காலிகள் போன்றவற்றை மாணவர்களின் பெற்றோர்களே செய்கின்றனர் என்றாரவர்.

அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே உருவாக்குவதற்கான திறன், வளம் மற்றும் அனுபவங்கள் அவர்களிடம் இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

அவர்களால் செய்யப்படும் பல பொருள்கள் இப்போது கடைகளில் விற்கப்படுகின்றன. ஆர்எப்டிஆர் அளித்து வரும் பல திட்டங்களில் பெருமைபடக்கூடிய ஒன்று மாணவர்கள் பள்ளியில் இருக்கும் போதே சிறு அளவிலான வியாபாரங்கள் செய்வதற்கான உதவிகள் பற்றி ஹெய்டி குறிப்பிட்டார்.

அதில் ஒன்று, “பர்மா சம்பல்”.

“அதை நான் முதலில் பார்த்த போது, இதை யார் சாப்பிடுவார்கள்’, என்று கேட்டேன். இது உள்ளூர் சம்பலிருந்து மாறுபட்டதாக இருந்தது. ஆனால், அது வியக்கத்தக்க வெற்றி கண்டுள்ளது என்றாவர்.

அவர்கள் மேற்கொண்டுள்ள பலவிதமான தொழில்கள் பற்றியும் அவர் விளக்கம் அளித்தார்.

அவர்களுக்கு ஆதரவு அளிப்பதிலிருந்து ஆளுமை அளிக்க வேண்டும் என்பதை ஹெய்டி வலியுறுத்தினார்.

 

புத்ராஜெயா கண்டுகொள்ளவில்லையே

 

பல சமூக அமைப்புகள் பல வேண்டுகோள்களை மீண்டும் மீண்டும் விடுத்திருந்தும், புத்ராஜெயா அகதிகள் பற்றிய 1951 ஆண்டு ஜெனிவா ஒப்பந்தத்தை (1951 Geneva Convention on Refugees) அங்கீகரிக்க மறுத்து விட்டதை ஹெய்டி சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இங்கிருக்கும் 150,000 அல்லது அதற்கும் மேற்பட்ட அகதிகள் ஆவணங்கள் இன்றி குடியேறியிருப்பவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. இந்த நிலைப்பாடு அகதிகளுக்கு பெரும் துன்பங்களை விளைவிக்கின்றன என்றாரவர்.

அவரது அமைப்பான ஆர்எப்டிஆரின் எதிர்கால நோக்கம் குறித்து ஹெய்டி மிகத் தெளிவாக இருக்கிறார்.

“முடிவாக, நாங்கள் கொள்கை வகுப்பதில் ஈடுபடுவோம்.

“அரசாங்கத்திற்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்படும் வரையில் நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்”, என்று அவர் சூளுரைத்தார்.

Refuge for Refugees முகநூலில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் ஆர்எப்டிஆர் அதன் ஐந்தாம் ஆண்டு விழாவை “எனது புன்னகைக்கு பின்னால்” என்ற தலைப்புடன் கொண்டாடுகிறது.