பினாங்கு போலிடெக்னிக் உணவக விவகாரம்: இனவாதம் ஆக்காதீர்கள், பி.கமலநாதன் கோரிக்கை

Slide3கோலாலம்பூர்- செப்ராங் பிராய் போலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை மூட பணித்ததன் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவலாக வந்த செய்தியை இனவாதம் ஆக்கவேண்டாம் என, துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.

அக்கல்லூரி இயக்குநரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒப்பந்த விதிகளை மீறியதால், இந்தியரின் உணவகத்தோடு சேர்த்து மொத்தம் 4 கடைகளை மூடப் பணித்ததாகவும், அவற்றுள் 3 மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானது என்றும் தனக்கு தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், அக்கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கல்லூரி நிர்வாகம் உணர்ந்துள்ளதோடு, இப்பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வுகாண அக்கல்லூரியின் இயக்குநர் உறுதியளித்துள்ளதாகவும் Slide1பி.கமலநாதன் தெரிவித்தார்.

ம.இ.கா. தேசியத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்  இதுபோன்ற இனவாதக் குற்றச்சாட்டுகளை மிகவும் கடுமையாகக் கருதுவதாகவும், இவ்விவகாரம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ள தம்மை பணித்துள்ளதாகவும் அவர் கூறினார். ம.இ.கா. இந்த விவகாரத்தை உயர்க்கல்வி அமைச்சுடனும் போலிதெக்னிக் இயக்குநருடனும் அணுக்கமாகக் கண்கானித்து, விரைவில் தீர்வுகாணும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பினாங்கு, செப்ராங் பிராயில் அமைந்துள்ள அரசாங்கக் கல்வி நிறுவனம் ஒன்றில், இந்தியருக்குச் சொந்தமான உணவகத்தை மூட அக்கல்லூரி பணித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் பகிரப்பட்டன. ‘ஷரியா’ சட்டங்களைப் பின்பற்றத் தவறியதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

halalபுலனக்குழுவிலும் முகநூலிலும் வெளியான ஒரு குரல் பதிவில், ஐ.எஸ்.ஓ. தரக் கட்டுப்பாட்டையும் ‘ஷரியா’ சட்டவிதிகளையும் பின்பற்றத் தவறியதால் அவ்வுணவகம் மூடப்படும் சாத்தியம் அமைந்திருக்கலாம் என இருவர் (உணவக உரிமையாளர் மற்றும் கல்லூரியின் உயர் அதிகாரி) பேசிக்கொள்வதாக இருந்தது. ‘ஹலால்’ அற்ற உணவுகள் பறிமாறப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை உணவக உரிமையாளர் மறுத்ததோடு, உணவகம் திறக்கப்பட்ட கடந்த 6 மாதங்களாக, தான் முஸ்லிம்கள் வாங்கும் கடைகளிலேயே இறைச்சிகளை வாங்குவதாகவும் கூறியிருந்தார்.

அக்கல்வி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை என்று மறுத்ததோடு, அது தொடர்பாக புக்கிட் மெர்தாஜாம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலதிகாரிகள் விடுமுறையில் உள்ளதால், இதுதொடர்பாக மேலும் கருத்துரைக்க அவர் மறுத்துவிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை, நிறுவனத்தின் இயக்குநர் விடுமுறையிலிருந்து வந்ததும் இந்த விவகாரம் தொடர்பான முழு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.