தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் அதன் பணியை முடிப்பது முடியாத காரியம்போல் தோன்றுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அப்படி ஒரு குழுவை அமைத்தது ஏன், அவருக்கு அதில் உண்மையான ஈடுபாடு உண்டா என்று டிஏபி கேள்வி எழுப்புகிறது.
“தேர்வுக் குழுவை வைத்துக்கொண்டு பிரதமர் என்ன செய்யப் போகிறார் என்று மலேசியர்கள் திகைத்து நிற்கிறார்கள். அதில் அவருக்கு உண்மையில் ஈடுபாடு உண்டா? உண்மையான நோக்கத்துடன்தான் அதைச் செய்தாரா?”. டிஏபி தேசிய துணைத்தலைவர் டான் செங் கியாவ் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையம்(இசி),தேர்தல் சீரமைப்புக்காக பெர்சே 2.0 முன்வைத்த எட்டு-அம்சக் கோரிக்கை குறித்து அந்த அமைப்புடன் பேச்சு நடத்தத் தொடங்கிவிட்ட வேளையில் அமைச்சரவை தேர்வுக் குழுவை அமைத்ததன் உள்ளார்ந்த காரணத்தை நஜிப் விளக்க வேண்டும் என்று கெப்போங் எம்பியுமான டான் இன்று ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
நஜிப்பும் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசும் முரண்படும் அறிவிப்புகள் செய்துள்ளதை டான் சுட்டிக்காண்பித்தார்.
நஸ்ரி அடுத்த பொதுத்தேர்தலில் தேர்தல் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார். ஆனால், நேற்று பெர்னாமா, அடுத்த பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம், நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பணி முடியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நஜிப் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.
“எனவேதான் குழுவின் பரிந்துரைகள் தேர்தலுக்குமுன் நடைமுறைக்குவரும் என்று பிரதமர் கூறும்போது அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் மலேசியர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
“நாடாளுமன்றம், வரும் அக்டோபர் மாதக் கூட்டத்தில் குழு அமைக்க ஒப்புதல் அளித்தால் குழு பரிந்துரைகள் செய்யவும் அவை சட்டமாக மாறி செயலாக்கம் பெறவும் ஆறு மாதம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.
“நஜிப் முன்னதாகவே தேர்தல் நடத்த முடிவு செய்தால் குழுவின் பரிந்துரைகளை எப்படிச் செயல்படுத்த முடியும்?”, என்று டான் வினவினார்.