14 ஆவது பொதுத்தேர்தல் அக்டோபர் மற்றும் மே மாதங்களுக்கிடையில், கிட் சியாங் ஆரூடம்

 

GEbetweenoctandmayஅடுத்தப் பொதுத்தேர்தல் இவ்வாண்டு அக்டோபர் மற்றும் அடுத்த ஆண்டு மே ஆகியவற்றுக்கிடையிலான ஏழு மாதங்களுக்குள் நடைபெறும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

சீன அதிபர் ஸீ ஜின்பிங் அக்டோபரில் வருகிறார்; முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த ஆண்டு ஜூனில் விடுதலையாகிறார். இவ்விரண்டு சம்பவங்களுக்கிடையில் 14 ஆவது பொதுத்தேர்தல் நடைபெறக்கூடும் என்றாரவர்.

விடுதலைக்குப் பிறகு, அன்வார், பேரரசரின் முழு மன்னிப்பு கிடைத்தாலன்றி, பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், அவர் நாடு முழுவதும் பயணம் செய்து பக்காத்தான் ஹரப்பானுக்காக தேர்தல் பரப்புரை செய்ய முடியும். இது பிரதமர் நஜிப் விரும்பாத ஒன்றாக இருக்கும்.

ஆகவே, எனது கணிப்பு அடுத்தப் பொதுத்தேர்தல் அக்டோபருக்கும் அடுத்தாண்டு மே மாதங்களுக்கிடையிலான ஏழு மாதங்களில் நடைபெறும் என்று கிட் சியாங் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் தவணை அடுத்த ஆண்டு ஜூன்25 இல் முடிவடைகிறது. முன்னதாக ஒரு திடீர் தேர்தல் நடத்தப்பட்டாலன்றி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனிடையே, அரசாங்கம் மாற வேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தில் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று கிட் சியாங் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு பாக்காத்தான் ராக்யாட் உடைந்து போனதால், பலர் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனால், மலேசிய அரசியல் களத்தில் மாற்றங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்போது, பிகேஆர், டிஎபி, அமனா மற்றும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா ஆகிய கட்சிகள் அடங்கிய புதிய எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது.

மலேசியாவை தற்காப்பதற்கு மக்கள் தற்போதைய அரசாங்கத்தையோ பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கையோ நம்பியிருக்க முடியாது.

சாதாரண மலேசியர்கள் மட்டுமே 14 ஆவது பொத்துத்தேர்தலில் மலேசியாவை கொள்ளையர் ஆட்சியிலிருந்து தற்காத்து காப்பாற்ற முடியும் என்றாரவர்.

14 ஆவது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புத்ராஜெயாவிலிருக்கும் பாக்கத்தான் அரசாங்கம் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கை மலேசியா ஒரு மக்களாட்சி நாடு, கள்ளராட்சி நாடல்ல, என்ற அதன் நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்துவதாகும் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.