தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே செப்டம்பர் மாதம் பக்கத்தான் ஹராபான் நடத்தும் பேரணியில் கலந்துகொள்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
“அதன் தலைவர் மரியா சின் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது: “அரசியல் ரீதியில் அது அவசியம்தானா என்பதை ஆராய்வோம்”.
மேலும் விவரித்த அவர், (பேரணியில்) முன்வைக்கப்படும் விவகாரங்கள் மலேசியரிடையே விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துமா என்பதைப் பார்க்க வேண்டும்.
“ஊழல் தவிர்த்து கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கிய விவகாரங்களும் உண்டு. இப்போதுள்ளதைவிட இன்னும் சிறப்பான ஒரு மலேசியாவை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்”, என்று மரியா கூறினார்.
நேற்று, பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், “Sayang Malaysia, Hapuskan Kleptokrasi” (மலேசியாவை நேசிப்போம், திருட்டுத்தனத்தை ஒழிப்போம்) என்ற பேரணியை நடத்தப்போவதாக அறிவித்தார். பேரணிக்கு முன்னதாக அமெரிக்க நீதித்துறை(டிஓஜே) 1எம்டிபிக்கு எதிராக தொடுத்துள்ள புதிய வழக்கு குறித்து பொதுமக்களுக்கு விளக்க தொடர் விளக்கக்கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
மரியா, எதிர்வரும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிரணி அதன் போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.