பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தையும் அதனுடன் சேர்ந்து மூன்று சாலைகள் அமைப்பதையும் தடுத்து நிறுத்த நீதிமன்ற ஆணை பெறலாமா என்று கெராக்கான் கட்சி ஆலோசித்து வருகிறது.
அவ்விவகாரத்தை கெராக்கானின் சட்டப் பிரிவு ஆழமாக ஆராய்ந்து வருவதாக அதன் உதவித் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.
“அத்திட்டத்தில் ஏதோ தவறு இருப்பதுபோல் தெரிகிறது. அதனால், கெராக்கான் நீதிமன்றத் தடை ஆணை பெற்று சாலைகள் அமைத்தல் உட்பட மொத்தத் திட்டத்தையும் நிறுத்தலாமா என்று ஆலோசிக்கிறது.
“அத்திட்டத்தில் ஊழல் மலிந்திருப்பதாகவும் ஒழுங்கீனம் நிறைந்திருப்பதாகவும் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்திருப்பதாகவும், பொதுப் பணத்தைப் பயன்படுத்துவதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுவதை ஆராய்ந்து வருகிறோம்”, என அவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
பினாங்கு போக்குவரத்து பெருந் திட்டத்தின் ஒரு பகுதியான அது ரிம6.34 செலவில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும். 2030-இல் அதைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை அமைக்கும் பணி 2013-இலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்காமல் தாமதப்பட்டுள்ளது.