கிட் சியாங்: 1எம்டிபி யாத்திரிகர்களுக்காக செலவிட்ட ரிம56 மில்லியன் அதன் கடன்களில் 0.01 விழுக்காடுதான்

kit1எம்டிபி    2011-இலிருந்து     ஹஜ்ஜு   பயணம்   செய்வோருக்காக     செலவிட்டதாகக்   கூறப்படும்   ரிம56 மில்லியனை    அதன்   மொத்த   கடன்களான     ரிம55 பில்லியனுடன்   ஒப்பிட்டால்  அது  0.01  விழுக்காடுதான்  என்கிறார்  டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்   லிம்   கிட்   சியாங்.

ஜஜ்ஜுப்  பயணத்   திட்டத்   தலைவர்    ஜைலானி    ங்கா,    1எம்டிபி   2011-இலிருந்து   இதுவரை      5,711  யாத்திரிகர்கள்    ஹஜ்ஜுப்  பயணம்   மேற்கொள்ள   ரிம56மில்லியன்   செலவிட்டிருப்பதாக   தெரிவித்திருப்பது   குறித்துக்   கருத்துரைத்தபோது    லிம்   இவ்வாறு   கூறினார்.

“பெரிய  தொகையைத்தான்  அது   தானம்  செய்துள்ளது.  ஆனால்,   பெருங்கடலாகக்   காட்சியளிக்கும்   அதன்   கடன்   தொகையுடன்   ஒப்பிட்டால்   இது   சிறு   துளிதான்”,   என  லிம்   நேற்றிரவு   கிளந்தானில்   செராமா   ஒன்றில்    கூறினார்.

2011-இலிருந்து    ஹஜ்ஜு   யாத்திரிகர்களுக்குச்   செலவிட்ட   தொகையை  வெளியில்     தெரிவிக்கும்    1எம்டிபி   கடந்த   மூன்றாண்டுகளுக்கான    அதன்   நிதிநிலை    அறிக்கையை    வெளியிடாதது    ஏன்    என்றவர்   வினவினார்.

1எம்டிபியின்   மொத்த   கடன்   எவ்வளவு   என்பது   யாருக்கும்    தெரியாது   என்ற   அவர்,   மலேசியர்கள்  பல    தலைமுறைக்  காலத்துக்குப்   பாடுபட்டுத்தான்  இந்தக்    கடனை    அடைக்க    வேண்டியிருக்கும்   என்றார்.

ஆகக்  கடைசியாக   1எம்டிபி   கணக்குகள்   தணிக்கை    செய்யப்பட்டு   வெளியிடப்பட்டது    2014,  மார்ச்சில்.

“2014-இலிருந்து   2017வரை   மூன்றாண்டுகளுக்கு    1எம்டிபி   கணக்கறிக்கை   வெளியிடப்படாதது  ஏன்   என்பது  அமைச்சர்களுக்குக்கூட  விளங்காத   மர்மமாக   உள்ளது”,   என்றார்.

என்றாலும்,  1எம்டிபியின்  மொத்த   கடன்கள்  ரிம50 பில்லியனிலிருந்து   ரிம55 பில்லியனாக  இருக்கலாம்  என்று  குறிப்பிட்ட   லிம்,   இதனுடன்   யாத்திரிகர்களுக்காக     செலவிடப்பட்ட   தொகையை   ஒப்பிட்டால்    அது   வெறும்   0.01   விழுக்காடுதான்   என்றார்.