14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்ததிலிருந்து, அந்த 91 வயது முன்னாள் பிரதமர் மாறுபட்ட பல அணுகுமுறைகளைக் கையாண்டபோதும், ‘சிலவற்றை மாற்ற முடியாது, மாற்றுவது கடினம்’ என நசீர் கூறினார்.
“என்னைக் கேட்டால், மீண்டும் மகாதீர் அப்பதவியில் அமராமல் இருப்பது நல்லது. அவருக்கென ஒரு வரலாறு இருக்கிறது, மக்கள் அவ்வளவு சுலபத்தில் அதனை மறந்துபோயிருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் அவர் பேசுவது, சுயமாக முகத்தில் அறைந்து கொள்வது போலவே தோன்றுகிறது. காரணம், இதையேத்தான் முன்பு அவர் பதவியில் இருந்தபோது செய்தார், இப்போது பிறரைக் குறை சொல்கிறார்”, என உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ், 1987-ல் கைது செய்யப்பட்ட நசீர் சொன்னார்.
மக்களுக்குச் சேவையாற்றுவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் நேரத்தைச் செலவளிப்பதாக அந்த முன்னாள் குத்துசண்டை வீரருமான நசீர், எதிர்க்கட்சியைச் சாடினார்.
“பிரதமர் வேட்பாளர் யார் என்று பரிந்துரைப்பது முக்கியம் அல்ல, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதுதான் இப்போது முக்கியம். மக்களுக்கு முதலில் சேவையாற்றுங்கள், பிறகு அவர்கள் உங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலில் நீங்கள் ஆட்சியைப் பிடித்தால், பிறகு முடிவு செய்யுங்கள் பிரதமர் யார் என்று,” என ‘பெரித்தா டெய்லி’ பத்திரிக்கையிடம் அவர் கூறினார்.
முன்னாள் கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினரான நசீர், பிரதமர் பதவிக்கு யாரையும் முன்னொழிய மறுத்துவிட்டார். எதிர்வரும் ஜூலை 14 தொடக்கம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் , பக்காத்தானுடனான உறவு மற்றும் தொகுதி ஒதுக்கீடு குறித்து கலந்துபேசி, முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
“பி.எஸ்.எம். கட்சி உறுப்பினர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். எங்கள் கட்சியில் நாங்கள் எப்பொழுதும், கலந்துபேசி ஒரு கூட்டு முடிவு எடுப்பதுதான் வழக்கம். ஆக, தனிப்பட்ட முறையில் நான் எதுவும் கூற முடியாது. மேலும், நான் பக்காத்தான் பட்டியலில் இல்லாத ஒரு வேட்பாளர் பெயரைக் கூறிவிட்டு, அதற்காக அவர்கள் என்னைச் சாடுவதை நான் விரும்பவில்லை”, எனவும் அவர் கூறினார்.
“எனவே, இப்போது நாங்கள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல், மக்களுக்குத் தேவையானதைத் தொடர்ந்து செய்துவர எண்ணியுள்ளோம். பக்காத்தான் ஹராப்பானுடனான எங்கள் உறவு, மகாதிர் மீதான கருத்துகள், 14-வது பொதுத் தேர்தல், தொகுதி ஒதுக்கீடு என்ற அனைத்தையும் குறித்து கட்சியின் மாநாட்டின் போது விவாதித்து முடிவெடுப்போம். ஏறக்குறைய நாங்கள் நிற்கப்போகும் தொகுதிகள் மற்றும் அதன் வேட்பாளர்கள் தேர்வாகிவிட்டது. ஆனால், கட்சி மாநாட்டின் போது, பேராளர்கள் முன்னிலையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். மக்கள் பணியாற்றிய இடங்களே, எங்கள் தேர்வாக அமையும். நிச்சயமாக, ‘பராசூட்’ வேட்பாளர்கள் எங்கள் கட்சியைப் பிரதிநிதித்து களமிறங்க மாட்டார்கள்”, எனவும் டாக்டர் நசீர் தெரிவித்தார்.
PSM நல்லதொரு கொள்கையுடைய கட்சி. மற்ற எதிர்க்கட்சிகள் சொந்த புத்தி கொண்டு செயல்படுகிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆம்! எதிக்கட்சி கூட்டணிகளில், சுயமாக அக்கட்சிகளுக்காக போராடியவர்களும், மக்களுக்காக சிறை சென்றவர்களும், ஊழல் புரியாதவர்கள் என்று எவருமே பிரதமர் ஆகும் தகுதியை பெற்றிருக்கவில்லையா? நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அம்னோவிலிருந்து வெளியாகிய அன்வாரும், மகாதிமிறும், முகிதீனும் தான் பிரதமர் வேட்பாளர்களா? கர்பால் சிங் உயிரோடு இருந்திருப்பாரேயானால், எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வருமேயானால், அவர் பிணத்தை தாண்டித்தான் அம்னோக்காரன் பிரதமர் ஆகமுடியும் என்பார்.
டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம், எனும் மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் அவர்களின் கூற்றையே பெரும்பாலான
மக்கள் விரும்புகிறார்கள்.
அருமையான சிந்தனை, இன்றைய இளைய தமிழ் சமுதாயம் மகாதீரின் 22 ஆண்டு ஆட்சிக்காலத்தில் அவன் நம் இனத்துக்கு எதிராக செய்த பல தில்லு முள்ளு தனத்தால் பொருளாதார ரீதியாக எப்படியெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்டோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். இதில் மிகவும் வேதனையான நிகழ்வு என்னவென்றால், இவன் என்னமோ இவன் ஆட்சி காலத்தில் பெரிதாக சாதித்துவிட்டதாக நமது இளைய சமூகத்தினர் தவறாக சிந்தித்துக்கொண்டி ருக்கின்றனர் !! இந்த மகாதீர் நம் இனத்துக்கு எதிராக செய்த சதிகள், தில்லுமுல்லுகள் யாவற்றையும் ஒரு புத்தகமாக எழுதி வைத்துள்ளேன், ஆர்வமுள்ளவர்கள் வெளியிட முன்வரலாம் !!!
MR.TAPAH BALAJI , மகாதிமிர் புரிந்திட்ட ஊழல்களை புத்தக வடிவில் வெளியிடுவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் Aliran மாத இதழில் எனது கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. ‘The 100 Scandals of Mahathir Years’ என்கிற தலைப்பில் வெளிவந்த அந்த கட்டுரை, மகாதிமிர் ஆட்சியில் ஏற்பட்ட 100 ஊழல்களை கொண்டதாகும். இங்கிலாந்திலிருந்து வெளிவரும், The OBSERVER பத்திரிகை அந்த கட்டுரையை வாங்க எண்ணி Aliran னுடன் தொடர்பு கொண்டது. Aliran என்னை கேட்டது. நமது நாட்டில் நடந்த ஊழல்களை வெளிநாட்டினருக்கு விற்க நான் தயாராயில்லை, எனக் கூறி மறுத்துவிட்டேன். உங்கள் பதிப்பிற்கு இந்த ‘மகாதிமிரின் 100 ஊழல்கள்’ தேவையென்றால், உங்கள் கைப்பேசி எண்ணை இந்த பதிப்பில் வெளியிடுங்கள்.