ஈப்போ- கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல், திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் தொடங்கவிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.
“சிவில் திருமணச் சட்டமுறைப்படி திருமணம் செய்துகொண்டவர்கள், பின்னர் அவர்களில் ஒருவர் தன்னிச்சையாக இஸ்லாம் மதத்தினைத் தழுவிடும் நிலை ஏற்படும்போது , சிவில் திருமணத்தின் வழி பிறந்த குழந்தைகளின் எதிர்காலம், அவர்களைப் பராமரிக்கும் உரிமைகள் போன்ற விஷயங்கள் பல ஆண்டுகளாக பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருவதற்குத் தீர்வு காணவே, இச்சட்டத்தில் சீர்திருத்தம் தேவையாக உள்ளது. இதனால் பல குடும்பங்கள், குறிப்பாகத் தாய்மார்கள், எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும்”, என சரஸ்வதி கோரிக்கை வைத்தார்.
மார்ச் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அட்டவணையிடப்பட்ட இச்சட்ட மசோதாவை திடீரென மறு ஆய்வு செய்வதற்காக அரசு ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பதாகத் துணைப்பிரதமர் அறிவித்தது, அன்று அனைவரையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சிவில் திருமணத்தின் வழி பிறந்த குழைந்தைகளின் பெற்றோர்கள் யாராவது ஒருவர் இஸ்லாம் மதத்தினைத் தழுவுவாரேயானால் , அக்குழந்தைகள் 18 வயது அடையும் வரை , தாம் பிறந்த மதத்திலேயே இருந்திடவும், அதன் பின்னர் அவர்கள் எந்த மதத்தினைப் பின்பற்ற வேண்டும் என அவர்களே சுயமாக முடிவெடுக்கலாம் என்பதுவுமே இந்த மசோதாவின் முக்கிய சாரம்சமாகும்.
“இந்தச் சட்ட மசோதாவின் நோக்கம், இதுநாள் வரை எழுந்துள்ள பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்தும் அதன் விளக்க உரையில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2009 இல், இவ்விவகாரத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை முடிவெடுத்திருக்கும் வேளையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் இந்தச் சர்ச்சைக்குச் சட்டத் திருத்தத்தின் வழி தீர்வுகாணப்படும் என அறிவித்திருந்தார்”, என்ப தை சரஸ் நினைவுகூர்ந்தார்.
இந்தத் திருமணச் சட்டத்திருத்த மசோதாவை மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ரசாலி இஸ்மாயில் வரவேற்றிருப்பதோடு, இந்த மாற்றம் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்திட வழி செய்யும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், நமது நாட்டின் முக்கிய அரசியல் சட்டப் பேராசிரியர்களில் ஒருவரான சாட் சலீம் பாரூக்கி, “இந்தத் திருமணச் சட்ட மசோதா மாற்றத்தில், இஸ்லாம் அல்லாதவர்களின் சிவில் திருமண உரிமைகள் மட்டுமே உள்ளடக்கியதாகவும், அவை அரசியல் சட்டத்திற்கும் இஸ்லாமிய கோட்பாட்டிற்கும் எவ்வகையிலும் பாதிப்பினை ஏற்படுத்தாது”, என்று விளக்கியுள்ளதையும் சரஸ்வதி சுட்டிக்காட்டினார்.
“ஆகவே, வாக்குறுதி அளித்தபடி, ஜுலை மாத நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும். அரசின் இந்த காலதாமதத்தினால், தாய்மார்களின் உரிமை , குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, அரசியல் சட்டத்தில் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள, அவர்களின் தார்மீக உரிமையும், நாட்டின் மதசார்பற்ற அரசியல் கொள்கையும் , மக்களின் ஒற்றுமையும் இதில் அடங்கியுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு, விரைந்து இதனைச் சட்டமாக்க வேண்டும்”, என சரஸ்வதி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இம்மாதம் 24 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, 12 நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவிருப்பதாக ஓர் இணையத்தளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.