அரசியலிலிருந்து விலகுகிறாரா கிட் சியாங்?

lim kitடிஏபி     மூத்த     தலைவர்     லிம்  கிட்   சியாங்,  அடுத்த  பொதுத்   தேர்தலுக்குமுன்னதாக    டிஏபிக்குத்   தடை   விதிக்கப்படும்   மிரட்டல்   எழுந்துள்ளதாகக்   கருதப்படுவதால்  அரசியலிலிருந்து   ஓய்வுபெறலாமா   என்று  ஆலோசிப்பதாக    தெரிகிறது.  அதற்குமுன்   அவர்  மக்களின்    கருத்தை    அறிய   விரும்புகிறார்.

அதன்   தொடர்பில்   மக்களிடமிருந்து    பின்னூட்டம்    பெறுவதற்கு    நாடு   முழுவதும்   பயணம்   மேற்கொள்ளப்போவதாக   லிம்  கூறினார்.  அதேவேளையில்   தம்   புதல்வர்   லிம்   குவான்   எங்   பினாங்கு   முதலமைச்சர்   பதவியிலிருந்து   விலக    வேண்டுமா   என்பதையும்   மக்களிடம்   கேட்டறிவார்.

“டிஏபி  பதிவை  இரத்துச்   செய்யப்போவதாகவும்   14வது   பொதுத்   தேர்தலில்   ராக்கெட்   சின்னத்துக்கு   அனுமதி    வழங்கப்படாது   என்றும்    மிரட்டுகின்ற    அளவுக்கு    நான்   நஜிப்புக்கும்    அம்னோ- பிஎன்  கூட்டணிக்கும்   ஒரு   மிரட்டலாக   இருக்கிறேன்    என்பதை   நான்  உணர்ந்ததே  இல்லை.

“நாடு  முழுவதும்   பயணம்    செய்து   இப்படிப்பட்ட    அம்னோ/பிஎன்  மிரட்டலுக்கு    நாம்   அடிபணியத்தான்   வேண்டுமா,   குவாங்   எங்    பினாங்கு   முதலமைச்சர்   பதவியிலிருந்து   விலகத்தான்     வேண்டுமா,   நான்   மலேசிய   அரசியலுக்கு  முழுக்கு   போடத்தான்   வேண்டுமா   என்று   மக்களிடம்   கேட்கப்    போகிறேன்”,  என  லிம்   ஓர்    அறிக்கையில்    கூறியிருந்தார்.

கடந்த   சனிக்கிழமை   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்கின்   பத்திரிகைச்   செயலாளர்   தெங்கு    ஸரிஃபுடின்   தெங்கு   அஹ்மட்,    அடுத்த   பொதுத்தேர்தலில்    டிஏபி   அதன்   சின்னத்தைப்  பயன்படுத்த   அனுமதிக்கப்படுமா,  பார்க்கலாம்   என்று   குறிப்பிட்டிருந்தார்.

இது,  நஜிப்பின்   உள்வட்டத்தில்    டிஏபியின்   பதிவை   இரத்துச்  செய்வது  குறித்து    ஆழமாக    பரிசீலிக்கப்படுவதைக்   காண்பிக்கிறது    என   லிம்  கூறினார்.

டிஏபி  பல     சாத்தியக்கூறுகளை   எதிர்கொள்ளத்    தயாராக   இருக்க   வேண்டும்  என்றாரவர்.

முதலாவதாக,   பக்கத்தான்   ஹராபான்   அடையாளச்   சின்னம்    பதிவு  செய்யப்பட்டு   ஏற்றுக்கொள்ளப்படும்  பட்சத்தில்   டிஏபி  அச்சின்னத்தில்  போட்டியிடலாம்.

இல்லையென்றால்,  ஹராபான்  கட்சிகளின்   சின்னங்களிலும்   டிஏபி   போட்டியிடலாம்   அல்லது   சுயேச்சைகளாக   களம்   இறங்கலாம்.

“டிஏபி  கட்சியினர்   சுயேச்சைகளாக,   சுயேச்சை    வேட்பாளர்களுக்குரிய   வெவ்வேறு   சின்னங்களில்     போட்டியிடுவது    குழப்பம்   தரலாம்.  ஆனால்,  இந்தத்   தகவல்   யுகத்தில்    அது  ஒன்றும்   கடக்க   முடியாத   பிரச்னை   அல்ல”,  என்றவர்   சொன்னார்.