பாஸ் தலைவர்கள் தங்கள் முன்னாள் கூட்டணிப் பங்காளிக் கட்சியான டிஏபிமீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. தாக்குதல் தொடர்கிறது. இப்போது அவர்கள் பக்கத்தான் ஹராபான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றத் தடையாக இருப்பதே டிஏபிதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பாஸ் செயல்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ், டிஏபி சக எதிர்க்கட்சிகளை மதிப்பதே இல்லை என்று சாடியதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் ஹராபான் வெற்றிபெற்றால் கிளந்தான் மந்திரி புசாராக ஹுசாம் மூசாவை அமனா கட்சி நியமனம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து நிக் அப்டு கருத்துரைத்தார்.
“இதுதான் டிஏபியின் உண்மையான மனப்பாங்கு. பாஸ் நீண்ட காலத்துக்கு முன்பே இதைப் புரிந்துகொண்டது.
“அதுதான் அவர்களை விட்டு விலகினோம். டிஏபி எப்போது தன் கை ஓங்கியிருப்பதாக நினைக்கிறதோ அப்போது மற்றவர்களைக் கட்டுப்படுத்த முனையும்”, என்றவர் கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் ஓர் அறிக்கையில், அடுத்த ஆண்டில் பக்கத்தான் ஹராபான் பாஸிடமிருந்து கிளந்தானைக் கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
“அடுத்த ஆண்டு ஹரி ராயாவுக்குள் புத்ரா ஜெயாவில் ஒரு புதிய அரசாங்கமும் பிரதமரும் இருக்க வேண்டும் அதேபோல் கிளந்தானிலும் புதிய அரசும் புதிய மந்திரி புசாரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்”, என்று கூறிய லிம் அப்பதவியில் ஹுசாம் அமர்த்தப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
இதைச் சுட்டிக்காட்டிய நிக் அப்டு, டிஏபி மற்ற கட்சிகளை மதிப்பதாக இருந்தால் எந்தக் கட்சிக்கு மந்திரி புசார் பதவி ஏன்பதை அதுவே முடிவு செய்திருக்காது என்றார்.