பக்கத்தான் ஹராபான் முதலில் பினாங்கில் விதிக்கப்பட்டிருக்கும் ஹோட்டல் வரியை இரத்துச் செய்யட்டும் அதன் பின்னர் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள சுற்றுலா வரியை இரத்துச் செய்வது பற்றிச் சிந்திக்கலாம் என கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கேங் லியாங் கூறினார்.
பினாங்கில் டிஏபி-யால் வழிநடத்தப்படும் அரசு (மூன்று நட்சத்திர தகுதிக்குக் குறைந்த தங்கு விடுதிகளுக்கு) இரண்டு ரிங்கிட், (மூன்று நட்சத்திர தகுதிக்கு மேற்பட்ட தங்குவிடுதிகளுக்கு) மூன்று ரிங்கிட் என ஹோட்டல் வரி விதிப்பதை டான் நாடாளுமன்ற ஏதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசாவுக்குச் சுட்டிக்காட்டினார்.
ஊராட்சிக் கட்டணம் ஏன்ற பெயரில் இந்த வரி பினாங்கில் எல்லாத் தங்குவிடுதிகளுக்கும் 2014-இலிருந்து விதிக்கப்படுகிறது.
“எதிரணி மலேசியாவில் தங்குவிடுதிகளுக்கு எதிராக வரி விதிக்கப்படுவதை இரத்துச் செய்ய வேண்டும் என்பதில் உண்மையிலே அக்கறை கொண்டிருந்தால் முதலில் அது பினாங்கில் தங்குவிடுதிகளுக்கு விதிக்கப்படும் ஊராட்சிக் கட்டணத்தை இரத்துச் செய்யட்டும். பினாங்கில் அதைச் செய்யும் அதிகாரம் அதற்கு உண்டு”, என்றார்.
வான் அசிசா நேற்று ஓர் அறிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான் வெற்றி பெற்றால் தங்குவிடுதிகளுக்கு விதிக்கப்படும் அன்றாட சுற்றுலா வரி இரத்துச் செய்யப்படும் என்று கூறியிருப்பது குறித்து கருத்துரைத்தபோது டான் இவ்வாறு கூறினார்.