பிரதமர் நஜிப் ரசாக் குடும்பத்துடன் தனது விடுமுறையைக் கழிக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தியை மீண்டும் பயன்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜாவாபோஸ்ட்.கோம் வெளியிட்ட செய்தியின்படி, பிரதமரும் அவர்தம் குழுவினரும் ஜூன் 26-ல், 9எம்-என்.ஏ.ஏ. பதிவு எண் கொண்ட விமானத்தில் பாலியை வந்தடைந்ததாக தெரிகிறது. மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான இவ்விமானம், முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் மற்ற ஊடகங்களால், ‘அரச விமானம்’ அல்லது ‘தனிநபர் ஜெட்’ என வர்ணிக்கப்பட்டுள்ள, நஜிப் பயணம் செய்த அவ்விமானம், மதியம் 12.30 மணியளவில் குதா, அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், நஜிப்பும் 23 பேர் அடங்கிய அவர் குழுவினரும் பாலியின் கவர்னர் மாட் மாங்கு பாஸ்திகா உட்பட மூத்த அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு, நூசா டுவா, சென்ட் ரெஜிஸ் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவை கூறியுள்ளன.
அதன் பிறகு ஜூன் 30-ம் தேதி, அவர்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியா, பெர்த்துக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான அவர்களின் போக்குவரத்து குறித்த செய்திகள் வெளியிடப்படவில்லை.
பாதுகாப்பு நோக்கங்களுக்காக
முன்னதாக, கடந்த ஜனவரி 3-ல், மலேசியா கினி வெளியிட்டிருந்த செய்திக்குப் பதிலளிக்கையில், உள்துறை துணை அமைச்சர் நுர் ஜஸ்லான், அரசாங்க விமானங்களை விடுமுறைக்காகப் பயன்படுத்த பிரதமர் என்ற முறையில், நஜிப்புக்கு உரிமையுண்டு என்று கூறியுள்ளார். நஜிப் தனது பயணங்களைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ளலாம், இருப்பினும், அதில் மற்ற சில சிக்கல்கள் உள்ளன என்று நுர் ஜஸ்லான் தெரிவித்திருந்தார்.
“சில சமயங்களில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, அரசாங்க போக்குவரத்து வசதிகளைப் பிரதமர் என்ற முறையில் அவர் பயன்படுத்தி கொள்ளலாம்,” என அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், நஜிப் மற்றும் அவர்தம் குடும்பத்தாரின் ஆஸ்திரேலியப் பயணம் அந்நேரத்தில் பலரின், குறிப்பாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது.
மலேசியர்களின் அடிப்படை வாழ்க்கை நிலையிலிருந்து நஜிப்பும் அவர் குடும்பமும் விலகி இருப்பதுபோல், அவரின் விடுமுறை தோற்றம் அளிப்பதாக கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கமாருல் பஹ்ரின் ஷா ராஜா அஹ்மட் கூறினார்.
செலவுகளைத் திருப்பி செலுத்த வேண்டும்
வெள்ளம் மற்றும் வாழ்க்கை செலவினங்களைச் சமாளிக்க முடியாமல், நாட்டு மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் வேளையில், நஜிப் அரசாங்க வானூர்தியில் உல்லாசப் பயணம் மேற்கொண்டது ஏற்புடையதல்ல என அவர் கருத்துரைத்திருந்தார்.
“கோல்ப் விளையாடுவது மற்றும் மனமகிழ் நிகழ்வுகளில் ஈடுபட்டப் படங்களை முகநூலில் வெளியிட்டது, மக்களின் உணர்வுகளை நஜிப் புரிந்துகொள்ளாமல் இருப்பதையேக் காட்டுகிறது,” என ராஜா கமருல் கூறியிருந்தார்.
நஜிப் உட்பட, பேரரசர், பேரரசியார் மற்றும் துணைப்பிரதமருக்கு, அந்த முக்கியப் பிரமுகர்களுக்கான விமானத்தைப் பயன்படுத்த உரிமையுண்டு என்று மே 2015-ல், நாடாளுமன்றக் கேள்வி நேரத்தின்போது பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், அதற்கான செலவுகளை ஏற்பது யார் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை.
நாட்டு தலைவரின் துணைவியார் அல்லது அவரின் குடும்ப உறுப்பினர்கள், அரசாங்க விமானங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து மலேசியா கினி செய்தி வெளியிட்டிருந்தது.
உதாரணத்திற்கு, விடுமுறைக்காக பொது விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த கனடியப் பிரதமரும் அவரின் குடும்பத்தாரும் பாதுகாப்பு கருதி, பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் விமானச் செலவுக்காக, ‘எகோனோமி’ வகுப்புக்கான கட்டணத்தைச் செலுத்தினர்.
அமெரிக்காவும் இதுபோன்ற விதிமுறையைக் கடைப்பிடிக்கிறது. ஆனால், அமெரிக்கத் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முதல் தர விமானக் கட்டணம் செலுத்துவதோடு, பயணத்தின் போது உட்கொண்ட உணவுகள் அனைத்திற்கும் பணம் செலுத்தியாக வேண்டும்.
இதுதான் மூன்றாம் உலக அரசியல்– மக்களின் பணம் அவன்களின் சொந்த பணம். இதுதான் பல ஆண்டுகளாக நடக்கிறதே.
உல்லாசப் பயணம் மேற்கொள்ள பாலியே சிறந்த இடம் என பிரதமருக்குத் தெரியும். கேமரன் மலைக்கு போனால் சீக்கிரமே வீடு திரும்ப முடியாது என அவருக்குத் தெரியும். ஏனென்றால், அங்குள்ள சாலைகள் பெரும் குண்டும் குழிகளுமாக உள்ளதாக தினந்தோறும் செய்தித் தாள்களில் நாம் காணுகிறோம். ஆஸ்திரேலியாவுக்கான பயணத்தில் அவரது அலுவல் என்னவென்று யாருக்குமே தெரியவில்லையாம். நான் சொல்லுகிறேன். சூப்பர் ஸ்டார் ராஜனியை போன்ற பிரபலமான நடிகர் ஒருவரை பார்க்க, சிட்னி செல்லுகிறாராம். அந்த நடிகருக்கே தெரியாமல் திடீரென அவர் வீட்டின் முன் போய் நிற்கப் போகிறாராம். நாய் விரட்டாமல் இருந்தால் சரி. (கண்ட கண்டவனெல்லாம் நேரம் காலம் தெரியாமல் வீட்டினுள் புகுத்துவிடுகிறார்கள் என்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு அல்சேஷன் நாய் வளர்ப்பதாக கேள்விப்பட்டேன்.)