மலாய் மொழியில் சிறப்பு விலக்கு – 2 அமைச்சர்களும் விளக்கமளிக்க வேண்டும்

Slide3மருத்துவத் துறை மாணவர்களுக்கு, எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி  தேர்ச்சிக்குச்   சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் முடிவிற்கு, அதன் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவ்ன் இருவரும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் சுப்ரமணியம் இந்தச் சர்ச்சைக் குறித்து விளக்கமளிக்க வேண்டும். அதோடு, இது தொடர்பாகப் பொதுச் சேவை துறையின் நிலைபாடு என்னவென்பதை, அதன் அமைச்சர் ஜோசப் எந்துலு தெரிவிக்க வேண்டும். அமைச்சர்கள் இருவரும் புதன்கிழமை கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்”, என துணைப் பிரதமர் கூறியதாக ‘பெர்னாமா’ செய்தி வெளியிட்டுள்ளது.

குத்தகை ஒப்பந்த முறையிலான, ‘யுடி41 கிரேட்’ மருத்துவ அதிகாரிகளுக்கு, விதிமுறைகளில் தளர்வு கொடுக்க, கடந்த பிப்ரவரி 23-லேயே பொதுச் சேவை இலாகா அனுமதி அளித்துள்ளது என, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா, நேற்று ஓர் அறிக்கையில் கூறியதைத் தொடர்ந்து, பல தரப்பினரிடையே அது சர்ச்சையை உருவாக்கியது.

குறிப்பாக, அம்னோ இளைஞர் பிரிவு, இச்செயல் தேசிய மொழியின் தரத்தைக் குறைப்பதோடு; அரசு Slide1ஊழியர்கள் மத்தியில் இரட்டைத் தரநிலைகளையும் அது உருவாக்கும் என்பதால், அந்தச் சிறப்பு தளர்வை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென சுகாதார அமைச்சுக்கு அழுத்தம் கொடுத்தது.

இருப்பினும், இந்தத் தளர்வு ஒன்றும் புதியதல்ல, மருத்துவ அதிகாரிகள் போதிய அளவில் இருப்பதை உறுதிசெய்ய, ஏற்கனவே இம்முறை நடைமுறையில் உள்ளது என டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

மேலும், நம் நாட்டில் சேவையாற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுக்கு, மலாய் மொழி தகுதி இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான மருத்துவப் பட்டதாரிகள், தங்கள் உயர்க்கல்வியை வெளிநாட்டில் அல்லது அனைத்துலகப் பள்ளிகளில் மேற்கொள்வதோடு, ‘ஓ லெவல்’ அல்லது ‘ஏ லெவல்’ தேர்வுகளில் அமர்வதால், இந்த எஸ்.பி.எம். நிலையிலான மலாய் மொழி (பி.எம்.) தேர்ச்சி தகுதியை இவர்களால் அடைய முடிவதில்லை எனவும் அவர் விளக்கினார்.

Slide2கடந்தாண்டு வரையில், ‘ஓ லெவல் பி.எம்.’ அல்லது தேசிய மொழி ஏ (பி.கே.ஏ.) தேர்ச்சியை, பொதுச்சேவை துறை நுழைவு தகுதியாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

பாதிக்கப்பட்ட மருத்துவப் பட்டதாரி மாணவர்கள், எஸ்.பி.எம். மலாய் தேர்வில் அமர முயற்சித்ததாகவும், ஆனால், அவர்கள் அனைத்து பிரதானப் பாடங்களுக்கும் – மலாய், வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் நன்னெறிக் கல்வி / இஸ்லாம் கல்வி என 6 பாடங்களுக்கானத் தேர்விலும் அமர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. மலாய் மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையானால், எஸ்.பி.எம். சான்றிதழ் பெற  இயலாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.