ஹாடி: மலாய்க்காரர்கள் 1எம்டிபி-யை மட்டுமல்ல மற்ற ஊழல்களையும் எளிதாக மறந்து விட்டார்கள்

hadiமலேசிய   வரலாற்றில்   மறக்கப்பட்ட    எத்தனையோ    ஊழல்களில்   ஒன்றுதான்   1எம்டிபி   ஊழல்   என்று   பாஸ்    தலைவர்    அப்துல்  ஹாடி   ஆவாங்    கூறினார்.

அப்படியே,   பாஸைக்   குறைகூறும்   டாக்டர்    மகாதிர்    முகம்மட்டையும்   இடிப்பதுபோல்,  அன்னிய   செலாவணி    வணிகம்,  பிஎம்எப்,    பெர்வாஜா   எஃகு  ஆலை  முதலியவையும்   இதில்   அடங்கும்  என்றார்.  அவை   மகாதிர்   பிரதமராக   இருந்தபோது    நடந்தவை.

“இவை   எல்லாமே  முடிவு  காணப்படாமல்  மறக்கப்பட்டவை.  அதிலும்  மலாய்க்காரர்கள்   mudah lupa(எளிதில்  மறந்து  விடுவார்கள்)”,  என்றார்.

Melayu Mudah Lupa  என்பது  மகாதிர்   2001-இல்  அம்னோ   பேரவையில்   வாசித்த   ஒரு   கவிதை.  மகாதிரைக்  கிண்டல்   செய்ய    அதைப்   பயன்படுத்திக்  கொண்டார்    ஹாடி.

“சங்கிலித்   தொடராக    நிகழ்ந்துள்ள   ஊழல்களில்    ஒன்றுதான்   1எம்டிபி.  இதற்குமுன்   பிஎம்எப்,  பெர்வாஜா,   ஊழியர்  சேமிப்பு   நிதி,   பெட்ரோனாஸ்,  தாபோங்   ஹாஜி,   அன்னிய    செலாவணி,   ஸ்கைஹாக்,  மைக்கா    ஹோல்டிங்ஸ்,    கிள்ளான்  துறைமுக   தீர்வையற்ற   மண்டலம் (PKFZ)  முதலியவை    இருந்தன.

“இப்போது  1எம்டிபி,  பினாங்கில்  (முதலமைச்சரின்   பங்களா   இன்னும்கூட   இருக்கலாம்.  எல்லாமே  குற்றச்சாட்டுகளாக   உள்ளன.  அவற்றுக்கு   எதிராக  நியாயமான   நடவடிக்கை  இல்லை ”,  என  ஹாடி  கூறினார்.

1எம்டிபி-இலிருந்து  கொள்ளையடிக்கப்பட்ட   பணத்தில்    வாங்கப்பட்டதாகக்   கூறப்படும்   சொத்துக்களைப்   பறிமுதல்    செய்ய    வழக்கு   தொடுத்துள்ள   அமெரிக்க    நீதித்துறைக்குக்    கண்டனம்    தெரிவித்ததற்காக   ஹாடி  பலரின்   குறைகூறலுக்கு    ஆளானார்.

தம்மைக்   குறைசொல்வோருக்குப்   பதிலுரைத்த   ஹாடி,   உள்நாட்டு   விவகாரத்தில்   அன்னியர்    தலையீட்டுகு   இடமளிப்பது    தொல்லையாகத்தான்    முடியும்  என்றார்.

“அது    கடல் நீரை   எடுப்பதற்குக்   கப்பலில்   ஓட்டை   போடுவதற்கு   ஒப்பான   செயலாகும்”,  என்றார்.