பினாங்கில் வாக்காளர்களின் முகவரிகள் மாற்றப்படுகின்றனவா?

addressபினாங்கு,  செபராங்   பிறையில்   குடியிருப்பாளர்கள்    சுமார்   100 பேரின்   முகவரிகள்   அவர்களின்   இணக்கமின்றியே   மாற்றப்பட்டிருக்கிறதாம்.

கடந்த   வாரம்  பல  குடியிருப்புப்   பகுதிகளுக்குச்   சென்றபோது   இது   தெரிய   வந்ததாக    செப்ராங்   பிறை    முனிசிபல்  மன்ற   உறுப்பினர்கள்   சதீஷ்    முனியாண்டி,    டேவிட்   மார்ஷல்,   பிகேஆர்   தேர்தல்   ஒருங்கிணைப்பாளர்   ஒங்   இயு  லியோங்  ஆகியோர்    தெரிவித்தனர்.

“அவர்கள்   முகவரி   மாற்றம்   செய்வதற்கு    தேசிய   பதிவுத்துறைக்கு(என்ஆர்டி)ச்   சென்றதில்லை.  பிறகு  இது  எப்படி    நடந்தது?

“இதன்  நோக்கம்  என்ன?  எதிர்வரும்   தேர்தலுக்காக   வாக்காளர்களின்  விவரங்களை   மாற்றுகிறார்களா? அவர்களின்   வாக்களிக்கும்   பகுதிகளும்   மாற்றப்பட்டிருக்கும்  என்று   நினைக்கிறோம்.  அப்படி   எதுவும்   நடந்திருந்தால்   அது   குற்றமாகும்.  அதிகாரிகள்   இதை   விசாரிக்க     வேண்டும்”,  என  சதீஷ்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

தேர்தல்   ஆணையம்   வாக்காளர்   பட்டியல்   பிரதிகளை     அரசியல்    கட்சிகளுக்குக்  கொடுக்க   மறுக்கிறது.  இதனால்   வாக்காளர்களின்  வாக்களிக்கும்  பகுதிகளைத்   தெரிந்துகொள்வதும்   சிரமமாக  உள்ளது   என்றாரவர்.

பாதிக்கப்பட்ட   29   பேர்  முகவரி   மாற்றம்    குறித்து   போலீசில்   புகார்   செய்திருப்பதாக   தெரிகிறது.

இதன்  தொடர்பில்   செபராங்  பிறை   செலாத்தான்  போலீஸ்   தலைவர்   சுப்பிரிண்டெண்டண்ட்  ஷாபி  அப்துல்  சமட்டைத்   தொடர்பு   கொண்டபோது    போலீஸ்   என்ஆர்டியின்  பதிலுக்காகக்   காத்திருப்பதாகக்  கூறினார்.