தஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் (பி.தி.பி.) காணாமல் போன இராணுவ ராடார் குறித்து, மலேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) 6 நபர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தது.
37 முதல் 48 வயதுக்குட்பட்ட 6 ஆண்களை, ஜொகூர் இலஞ்ச ஒழிப்பு ஆணய அலுவலகத்தில் விசாரித்ததாக, அதன் துணை ஆணையர் அஷாம் ஷாக்கி, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த அறுவரும் பி.தி.பி.-யில் வேலை செய்யும் உதவி காவலதிகாரிகளும் சுங்கத்துறை அதிகாரிகளும் ஆவர்.
உயர் தொழில்நுட்ப இராணுவ ராடார் உபகரணங்களைக் கொண்டிருந்த அந்தக் கொள்கலன் ஆஸ்திரேலியாவிலிருந்து ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்லவிருந்தது, முறையான பயண ஆவணங்கள் இல்லாததால், தஞ்ஜோங் பெலெபாஸ் துறைமுகத்தில் அது தடுத்து வைக்கப்பட்டது.
இருப்பினும், சுங்கத்துறை அந்த ராடார் கருவி காணாமல் போனது என்று வெளியான செய்தியை மறுத்ததோடு, ராடார் வைக்கப்பட்டிருந்த கொள்கலன் அதன் இலக்கான நெதர்லாந்து, ரோட்டர்டாம் துறைமுகத்தை அடைந்துவிட்டது என்றும் ஜூலை 29-ல் அறிவித்தது.
வழக்கு தொடர்பாக, துறைமுகத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து வருவதாகவும், அதில் இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஏதாவது உள்ளதா என்பதை எம்.ஏ.சி.சி. நிர்ணயிக்கும் எனவும் அஷாம் கூறினார்.
“இந்த விசயத்தில் இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்”, என அவர் தெரிவித்தார்.
விசாரணைக்காக இன்னும் பலர் அழைக்கப்படும் சாத்தியம் உள்ளதையும் மறுப்பதற்கில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.