மைடின், கெடாய் ராக்யாட் பற்றிய கருத்துக்களை நிராகரிக்கிறது

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரே மலேசியாப் பொருட்கள் விலை அதிகமானவை தரம் குறைந்தவை என டிஏபி-யின் டோனி புவா கூறியுள்ளதை அந்தக் கடைகளை நடத்தும் மைடின் நிறுவனம் மறுத்துள்ளது.

கிளானா ஜெயா கடையில் இன்று பிற்பகல் நடத்திய 90 நிமிட நிருபர்கள் சந்திப்பில் மைடின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் பேசினார்.

அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தகராற்றுக்குரிய பொருட்களை விநியோகம்  செய்கின்றவர்களும் ஆய்வுக் கூட அறிக்கைகளுடன் தொழில்நுட்பர்களும் அங்கு இருந்தார்கள்.

டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான புவா தெரிவித்த 10க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்று மாத்திரமே செல்லத்தக்கது என அமீர் சொன்னார்.

ஆயிஸ்டர் சாறு மீது மட்டுமே தவறான விவரங்களைக் கொண்ட சிட்டை ஒட்டப்பட்டுள்ளது என்ற விஷயத்தில் மட்டும் புவா சொல்வது சரி என அவர் ஒப்புக் கொண்டார்.

புவா தமது விநியோகிப்பாளர்கள் மீது ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொள்வதாகவும் அமீர் சொன்னார்.

மற்றக் குற்றச்சாட்டுக்கள் மூலம் பாதகத்தை புவா ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.

புவா தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, ‘பாதி உண்மை’ என்றும் அமீர் கூறிக் கொண்டார்.

வெவ்வேறு தரத்திலான பிரிவுகளைச் சேர்ந்த தவறான பொருட்களை அவர் ஒப்பீட்டு செய்திருக்க வேண்டும் அல்லது தவறான சட்டங்களை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும் என்றும் அமீர் குறிப்பிட்டார்.

“நீங்கள் மற்றவர்களைக் குறை சொல்வதற்கு முன்னர் முதலில் கற்றுக் கொள்ளுங்கள். அல்லது பள்ளிக்கூடத்துக்குச் செல்லுங்கள்…. நீங்கள் ஏதாவது சொல்லும் முன்னர்,” என அந்த ஆக்ஸ்போர்ட் பட்டதாரியைப் பற்றிக் கூறும் போது சொன்னார்.