ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Slide1புதிய  ‘கிரேட் யுடி41’ ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் அனைவரும் எஸ்.பி.எம். மலாய் மொழியில், குறைந்தபட்ச ‘தேர்ச்சி’யைப் பெற்றிருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களை ஒரே தரநிலையாக்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்  டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

எஸ்.பி.எம். தேர்வில் மற்றப் பாடங்களை எடுக்காமல், மலாய்ப் பாடத்திற்கான தேர்வை மட்டும் மருத்துவப் பட்டதாரிகள் எழுதுவதற்கு வகை செய்ய கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுக்கு உதவுமென அவர் தெரிவித்தார்.

மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், 2016-ல் இந்த ஒப்பந்த நியமனம் அறிமுகமானது. அக்காலக்கட்டத்தில், எஸ்.பி.எம். மலாய் மொழி தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சிகூட பெறாத மலேசிய மருத்துவப் பட்டதாரிகள் ஒரு சிறு எண்ணிக்கையிலேயே இருந்தனர்.

“இவர்கள் தங்கள் பெற்றோருடன் வெளிநாடு சென்ற அரசாங்க அதிகாரிகளின் பிள்ளைகள் ஆவர். வெளிநாட்டிலேயே மருத்துவக் கல்வி கற்ற இவர்கள், எஸ்.பி.எம்.  மலாய் தேர்வில் அமராதவர்கள்,” என அவர் கூறினார்.

2016-லிருந்து நியமனம் பெற்ற 4,500 ஒப்பந்தங்களில், 23 மருத்துவப் பட்டதாரிகள் மட்டுமே இப்பிரச்சனையை எதிர்நோக்கி   உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒப்பந்த முறையிலான, ‘யுடி41 கிரேட்’ மருத்துவ அதிகாரிகளுக்கு, மலாய் மொழி தேர்ச்சியில் தளர்வு கொடுக்க, பொதுச் சேவை இலாகா அனுமதி அளித்துள்ளது என சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறியிருந்தார்.

இது குறித்து, சுகாதார மற்றும் பொதுச் சேவை துறை அமைச்சர்கள் இருவரும் புதன்கிழமை அமைச்சரவையில் விளக்கமளிக்க வேண்டும் என துணைப் பிரதமர்  டாக்டர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கடந்த திங்கட்கிழமை பணித்திருந்தார். இதற்கு முன் அமைச்சரவையில் இதுகுறித்து ஏதும் விவாதிக்கப்பட்டதில்லை என்றும் துணைப் பிரதமர் கூறினார்.