பேச்சுக்குப் பேச்சு அன்னிய தலையீடு என்று வாதமிடும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடம் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஒரு கேல்வி கேட்க விரும்புகிறார்.
1எம்டிபியில் சுருட்டப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்தை மலேசிய விவகாரங்களில் அன்னியர் தலையீடு என்று கண்டித்த பாஸ் தலைவர், நேற்று, உள்நாட்டு விவகாரங்களில் அன்னியர் தலையீட்டை வரவேற்பது தொல்லைகளுக்குத்தான் வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.
அன்னியர் தலையீடு என்ற ஹாடியின் வாதம் “விந்தையாகவும் வினோதமாகவும்” இருப்பதாக லிம் கூறினார்.
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தோ அதன் அமைப்புகளில் ஒன்றிடமிருந்தோ பக்கத்தான் ஹராபான் தலைவர்கள் கணக்கில் ரிம2.6 பில்லியன் வரவு வைக்கப்பட்டிருந்தால் ஹாடி இந்நேரம் பக்கத்தான் ஹராபானைத் தாக்குத் தாக்கென்று தாக்கியிருப்பார். தேசிய இறையாண்மைக்குக் குழிபறிக்கும் அன்னியர் தலையீட்டுக்கு அது சான்று என்றும் கூவியிருப்பார்.
“அதே ஹாடி, (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக் அம்பேங்கில் தம் வங்கிக் கணக்கில் இருந்த ரிம2.6 பில்லியன் சவூதி அரசக் குடும்பம் 13வது பொதுத் தேர்தலுக்காகக் கொடுத்த நன்கொடை என்று கூறியபோது வாயைப் பொத்திக்கொண்டு இருந்தது ஏன்?
“நன்கொடை அமெரிக்காவிடமிருந்து வந்தால் அது அன்னிய தலையீடு எனவே தவறானது, அதேவேளை சவூதி அராபியாவிடமிருந்து வந்தால் அது நம் இறையாண்மையை மேன்மையுறச் செய்யும் எனவே ஏற்றுக்கொள்ளத்தக்கது, அப்படித்தானே?
“ஹாடி ‘அன்னியர் தலையீடு’ என்பதை விளக்க முற்படும்போது இரட்டை நியாயம் பேசுகிறார்- மேலை நாடுகளிடமிருந்து வந்தால் தவறு சவூதி அராபியாவிலிருந்து வந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அவருக்கு”, என்றார்.
ஆனால், டிஏபி அப்படியல்ல என்று வலியுறுத்திய லிம், மலேசிய விவகாரங்களில் அன்னியர் தலையீட்டை – அது யுஎஸ்ஸிடமிருந்து வந்தாலும் சவூதி அராபியாவிடமிருந்து வந்தாலும்- டிஏபி அதை ஆதரிக்காது என்றார்.
பேச்சுக்கு பேச்சு அந்நியர் தலையீடு என ஹாடி அவங்கை வசைபாடும் லிம் கிட் சியாங்கே, ஐந்து வருடங்களுக்கு முன் மூச்சுக்கு மூச்சு இதே ஹாடி அவாங்கை வானளாவ புகழ்ந்தீர்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு மகாதிமிரை கண்ட கண்ட மாதிரி வசைபாடினீர்கள். இன்றோ, கட்டிப் பிடித்துக் கொள்கிறீர்கள். தாங்க முடியலடா சாமி! மொத்தத்தில், வோட்டு போடும் மக்களாகிய நாங்கள், அருமையான முட்டாள்கள்!