ஷெட்டி : ஊடகங்களுக்கு இனி பேட்டியளிப்பது இல்லை

Slide1ஊடக நேர்காணல்களைத் தவிர்க்கப்போவதாக, தேசியப் பொருளகத்தின் முன்னாள் கவர்னர் ஷெட்டி அக்தார் அசிஸ் முடிவெடுத்துள்ளார்.

“இனி நான் பேட்டி எதுவும் கொடுக்கப்போவதில்லை. ஊடக நேர்காணல்கள் எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துள்ளன,” என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறினார்.

இருப்பினும், அதற்கான  காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

நேர்காணல்களைத் தவிர்ப்பதற்கு, அண்மையில் நடந்த பேட்டியில், ஒரு விஷயம் குறித்து உரக்க குரல் கொடுத்தது காரணமா எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் ஆசிய நிதி நெருக்கடியின் 20-ம் ஆண்டு நிறைவை ஒட்டியே (ஜூன் 29) ஊடகங்களில் பேசினேன். தவிர , கடந்த ஓராண்டாக நான் எந்தவொரு நேர்காணலிலும் பேசியதில்லை,” எனவும் அவர் கூறினார்.

ஃபோரேக்ஸ் இழப்புகள் குறித்து அரச விசாரணை ஆணைக்குழு முன்மொழியப்பட்டிருப்பது, மத்திய வங்கிக்கு ஏதாவது தாக்கத்தைக் கொடுக்குமா என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

1எம்டிபி விவகாரத்தில், மலேசிய வரலாற்றிலேயே இல்லாத அளவு ‘உயர் நிர்வாக அபராதம்’ விதிப்பதைத் தவிர, தேசியப் பொருளகத்தால் அதிகம் எதையும் செய்ய முடியாது என, சின் சியூ டெய்லி நாளிதழுக்கு அண்மையில் அளித்த நேர்காணலில்  ஷெட்டி கூறியிருந்தார்.

இவ்விவகாரத்தில் தேசியப் பொருளகத்திற்கு வழக்கு தொடுக்கும் அதிகாரம் ஏதும் இல்லையென்றாலும், அவ்வாறு செய்யக்கூடிய எந்த நிறுவனத்திற்கும் உதவ  எப்போதும் தயாராக உள்ளது எனவும் அவர் அப்பேட்டியின் போது கூறியிருந்தார்.