மலேசியாவைத் தோல்வி கண்ட அரசு எனவும், பொருளாதாரத்தில் சரிவு கண்டுவரும், திவாலாகப் போகும் அரசாங்கம் எனவும் ஒருசில தரப்பினர் கூறுவது, தனக்கு வியப்பாக உள்ளது எனத் தகவல், தொழில்நுட்ப, ஊடகத்துறை அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியுள்ளார்.
“அரசியலில் வெளியிடப்படும் கருத்துகள் உண்மையாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். நாட்டின் அடையாளத்திற்கு, முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மைக்கு, அரசியல் நிலைத்தன்மைக்கு இது மிக அவசியம். அரசியலில் நாம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம், ஆனால் நாட்டின் நற்பெயரைக் காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்”, என தனது வலைப்பதிவில் அவர் கூறியுள்ளார்.
“நாட்டின் பொருளாதாரம் சரிவு கண்டு வருகிறது, நாடு திவாலாகப் போகிறது போன்ற கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை. ஆக, இதுபோன்ற கருத்துகளை நாம் பதிவு செய்யக்கூடாது”, எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நஜிப்பின் தலைமையில், நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக தகவல்கள் கூறுவதாக சாலே சொன்னார்.
“திரேடிங் எகோனோமிக்ஸ் 2017-ன் தகவல் படி, 1998 (-7.36%), 2008 (3.32%) & 2009-ம் (-2.53%) ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 2017 காலாண்டில், நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5.6% உயர்ந்துள்ளதாக தெரிகிறது.”
“இந்தக் கூற்று உண்மையானது, நாடு மற்றும் தலைவர்களின் கௌரவத்தைக் காக்க தேவையான ஒன்று. தலைவர்களுடன் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களின் நல்ல செயல்களையும் தவறாக சித்தரிப்பது அரசியல் தார்மீகம் அல்ல”, என அவர் தெரிவித்தார்.
2017 உலகப் போட்டித்திறன் (World Competitiveness) ஆண்டுமலர், உலகில் போட்டித் திறன்மிக்க 63 நாடுகளில் மலேசியா 24-வது இடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. பிற ஆசிய நாடுகளான தாய்லாந்து (27), பிலிப்பீனா (41), இந்தோனேசியா (42), மற்றும் மியான்மார், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புரூணை ஆகியவை 63-வது இடத்திலும் உள்ளன. ஆக, மலேசியா எப்படி பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடாக சித்தரிக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
உதாரணத்திற்கு, பிரதமர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதால் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது எனும் கூற்று தவறானது ஆகும். காரணம், அவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கொண்ட பயணமே தவிர, உல்லாசப் பயணம் அல்ல என அவர் விளக்கப்படுத்தினார்.
“உதாரணத்திற்கு, பிரதமரின் இந்தியப் பயணம் ரிம 159 பில்லியன் முதலீட்டையும் சீன நாட்டுப் பயணம் ரிம144 பில்லியன் முதலீட்டையும் ஈர்த்துள்ளது. இந்த வெளிநாட்டு முதலீடுகளின் வழி கிடைக்கும் இலாபம், $9.39 பில்லியன் அமெரிக்க டாலர் பெருமானமுள்ள கேரி தீவு துறைமுகத் திட்டம் மற்றும் ஜொகூர் பாருவில், ரிம 15 பில்லியன் பெருமானமுள்ள, 404.6 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் ரோபோடிக் ஃபியூச்சர் சிட்டி (Robotic Future City) போன்றவற்றைக் கட்டமைக்கப் பயன்படுத்தப்படும்,” எனவும் தெளிவுபடுத்தினார்.
இந்த மேம்பாட்டுத் திட்டங்களால், மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் மேம்பட வாய்ப்புண்டு எனவும் சாலே சைட் கெருவாக் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.