பெங் ஹோக் மற்றும் எம்ஒ1 விசாரணைகளில் ஏன் இரட்டைத் தரம், விளக்க அளிக்க எம்எசிசிக்கு அழைப்பு

 

Teobenghockinvitesmaccமலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் “மலேசியன் அதிகாரி1” (எம்ஒ1) விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட முறையிலும், தியோ பெங் ஹோக் விவகாரத்தில் பின்பற்றிய துளைத்தெடுக்கும் வகையான விசாரணை முறையிலும் இரட்டைத் தரம் பின்பற்றப்பட்டுள்ளதிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தியோ பெங் ஹோக் ஜனநாயகத்திற்கான அறக்கட்டளை எம்எசிசிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

டிஎபியின் முன்னாள் அரசியல் செயலாளர் தியோ பெங் ஹோக் மற்றும் எம்ஒ1 ஆகியோர் சம்பந்தப்பட்ட எம்எசிசியின் விசாரணை முறையில் பெரும் வேறுபாடுகள் இருப்பதாக தியோ பெங்ஹோக் அறக்கட்டளை கூறுகிறது.

எம்எசிசியால் விசாரிக்கப்பட்ட தியோ பின்னர் ஷா அலாமிலுள்ள அதன் தலைமையகத்திற்கு வெளியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.

எதிர்வரும் ஜூலை 16இல், எம்எசிசி கோலாலம்பூரில் “Reforming MACC: A Road To Good Governance and Human Rights”,என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்நிகழ்ச்சியில் எம்எசிசியின் தலைவர் சுல்கிப்ளி அஹமட், பெங் ஹோக் அறக்கட்டளையின் கேள்விக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பை இன்று பெங் ஹோக் அறக்கட்டளையைப் பிரதிநிதித்து தேசியக் கவிஞர் சாமாட் சைட் தலைமையிலான ஒரு குழு புத்ராஜெயாவிலுள்ள எம்எசிசி தலைமையகத்தில் கொடுத்தது.

ஆனால், ஐந்து பேரடங்கிய அக்குழு சுல்கிப்ளியைச் சந்திப்பதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தது. அவர்கள் தங்களுடன் வைத்திருந்த கைத்தொலைபேசி மற்று காமிராக்களை உள்ளே கொண்டு செல்வதற்கு காவலர்கள் அனுமதிக்கவில்லை.

இக்கட்டத்தில், தியோவின் சகோதரி, தியோ லி லான், தாம் இதற்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்கு சென்று பிரதமர் நஜிப்பைச் சந்தித்ததாகவும் அப்போது அவரது கைத்தொலைபேசியை தம்முடன் கொண்டுசெல்வதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இப்போது ஏன் தடை என்று வினவினார்.

இறுதியில், அழைப்பை எம்எசிசி கட்டடத்திற்கு வெளியிலுள்ள சுவர் ஒன்றின் மீது ஒட்டிவிட்டனர். இப்போதைக்கு இதுதான் எம்எசிசியின் புதிய தபால் பெட்டி என்று பென் தியோக் அறக்கட்டளையின் செயல்முறை செயலாளர் இங் யாப் ஹவா குறிப்பிட்டார்.

இந்தச் சுவற்றுக்கு இருக்கும் புரிந்துணர்வுகூட எஎம்சிசிக்கு இல்லை என்று பாக் சாமாட் கிண்டலாகக் கூறினார்.

எனினும், இந்த கலந்துரையாடல் பயன் குறித்து அவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு பொதுமக்களை திரளாக வந்து கலந்துறையாடலில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இக்கலந்துரையாடல் ஜூலை 16 இல், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் இரவு மணி 8.30க்கு தொடங்கும்.

இக்கலந்துரையாடலில் உரையாற்றவிருப்பவர்களில் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் மற்றும் தியோ பெங் ஹோக் அறக்கட்டளையின் பிரதிநிதி ஒருவரும் அடங்குவர்.