14 ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு டிஎபியை முடமாக்கப் பார்க்கிறது ரோஸ்

 

Rostocrippledapடிஎபி அதன் மத்திய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க மீண்டும் கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று மன்றங்கள் பதிவக அதிகாரி உத்தரவிட்டிருப்பது அக்கட்சி 14 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தயார்படுத்திக்கொள்வதை கீழறுக்கும் நடவடிக்கையாகும் என்று டிஎபி தலைவர்கள் இன்று கூறினர்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கையை வெளியிடுவதின் நோக்கம் கட்சியின் நிருவாகத்தை முடமாக்குவதும், அதன் 14 ஆவது பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஓர் அவசரக் கூட்டத்திற்குப் பின்னர் கூறினார்.

ரோஸின் முடிவை எங்களுக்குத் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வமான கடிதத்தை நாங்கள் இன்னும் பெறவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

புதிய தேர்தல் நடத்தும் கேள்வியே எழக்கூடாது, ஏனென்றால் ரோஸ் விடுத்திருந்த தொடக்க கட்டளைப்படி செப்டெம்பர் 29, 2013 இல் டிஎபி ஓரு தேர்தலை நடத்தியுள்ளது என்று குவான் எங் வலியுறுத்தினார்.

பத்திரிக்கை அறிக்கைக்குப் பதிலாக ரோஸ் அதன் முடிவை எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கடிதம் இல்லாமல் என்ன பிரச்சனை என்பது தெரியாது என்று கூறிய டிஎபியின் சட்டப் பிரிவு தலைவர் கோபிந்த் சிங் டியயோ, கடிதம் எங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று நம்புகிறோம் என்றார்.