“டாக்டர் மகாதீர் தனது பேச்சு மற்றும் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும்”, என அந்த முன்னாள் பிரதமரைத் துணைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை எப்போதும் பழித்துப் பேசுவது குறித்து ஸாகிட் கருத்துரைத்தார்.
அம்னோ மற்றும் பாரிசானின் துணைத் தலைவரான ஸாகிட், “ஓர் அரசியல்வாதி எனும் முறையில் நன்நடத்தை, ஒழுக்கம், அரசியல் அறநெறி போன்றவை மகாதீருக்கு இருக்க வேண்டும்”, எனச் சொன்னார்.
ஒரு சாதாரண மனிதர் எனும் முறையில், மகாதீரும் தனது 22 ஆண்டுகால பிரதமர் பதவியில், நிச்சயம் ஏதாவது பலவீனங்களையும் தவறுகளையும் கொண்டிருந்திருப்பார். ஆனால், அவை யாவும் ‘மரியாதைக்கு உரியவர்’ எனும் அடிப்படையில் மறைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.
“முடிந்துபோன விஷயங்களைப் பற்றி பேசுவதில் பலனில்லை, முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும், வரலாறு அதனை நியாயப்படுத்தி காட்டட்டும். முடிந்தவரை மற்றவரை நாம் குறை சொல்லாமல் இருப்போம். பதவிகாலத்தின் போது, அவர் செய்த பல தவறுகள் நமக்கு தெரியும். ஆனால், அந்தக் கசப்பான செய்திகளை நாங்கள் வெளிபடுத்த விரும்பவில்லை.”
இன்று, பாகான் டத்தோ அம்னோ பிரிவு பிரதிநிதிகள் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து பேசுகையில், ஸாகிட் இதனைச் சுட்டிக்காட்டினார்.
மகாதீரின் எல்லை மீறிய விமர்சனங்களால், நஜிப் பொறுமை இழந்துவிட்டார்.
“அவரின் காலம் முடிந்துவிட்டது, இனி அவர் அமைதியாக இருந்து, இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, இன்றைய தலைவர்களின் குறைகளை வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமராக இருந்த காலத்தில், அவரின் குறைகளை மறைக்க எங்களைப் பயன்படுத்தினார். இதை அவர் மறந்துவிடக் கூடாது. பிறகு, நாங்களும் அவற்றையெல்லாம் வெளியிட வேண்டிவரும்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“பதவி காலத்தின் போது, அவர் பலமாக இருந்ததற்கு, அம்னோ உறுப்பினர்கள் அவருக்கு வழங்கிய வற்றாதா ஆதரவே காரணம்”, எனவும் அவர் தொடர்ந்து கூறினார்.
மேலும், அரசியல் அரங்கிலிருந்து அன்வாரைத் தூக்கியெறிந்த மகாதீரே, அவரை இன்று ஆதரிப்பது தொட்டும் ஸாகிட் கருத்துரைத்தார்.
“இளம் தலைவர்கள் பழையத் தலைவர்களை மதிக்க வேண்டும், அதேபோல பழையத் தலைவர்கள் இளையவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும். தேவைக்குப் பயன்படுத்திவிட்டு, பிறகு அவர்களைத் தூக்கியெறியக் கூடாது, இது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல”, எனவும் அவர் கூறினார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.