பாஸ் ஏற்பாடு செய்யவிருக்கும், 1எம்டிபி வட்டமேசை கலந்துரையாடலுக்கு, ஜனநாயகச் செயற்கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தான் செங் கியாவ்-ஐ அழைக்கவிருப்பதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவித்துள்ளார்.
தான் செங் கியாவ், 1எம்டிபி விவகாரங்களைக் கவனித்து வரும் ஏஜென்சிகளில் ஒன்றான, பொது கணக்கு குழுவின் (பிஏசி) துணைத் தலைவர் ஆவார்.
அவரோடு, 1எம்டிபி-யின் முன்னாள் தலைவர் பாக்கே சாலே, முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம் மற்றும் பொருளாதார நிபுணர் ஜோமோ க்வாமே சுந்தரம் போன்ற முக்கியப் பிரமுகர்களும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட உள்ளதாக, துவான் இப்ராஹிம் தெரிவித்ததாக, ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியா 1எம்டிபி நிதி மோசடி குறித்த வழக்கைத் தொடர மறுத்ததால்தான், வெளிநாடுகள் விசாரணை நடத்த முடிவெடுத்தன எனும் துவான் இப்ராஹிமின் குற்றச்சாட்டை, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஷார்காசி, சாடி பேசியதன் விளைவாக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய அரசியலில் வெளிநாடுகளின் தலையீடுகள் பற்றிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் அறிக்கை குறித்தும், துவான் இப்ராஹிம் விமர்சனத்தில் புவாட் மேற்கோளிட்டிருந்தார்.
தன் மீதான புவாட்டின் விமர்சனத்தைத் துவான் இப்ராஹிம் மறுத்தாலும், தன்னை விமர்சிக்க ஹாடியின் பெயரைப் புவாட் பயன்படுத்தியதை அவர் கண்டுகொள்ளவில்லை.
அவ்வறிக்கையில், அந்நிய நாடுகளின் தலையீடுகள் பற்றி கருத்துரைத்ததோடு, மலேசிய வரலாற்றில் தீர்க்கப்படாத பல மோசடிகளில் 1எம்டிபி-யும் ஒன்று என்றும் ஹாடி கூறியிருந்தார்.
இந்த வட்டமேசை கூட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.