என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதவி துறக்க வேண்டும் என பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றத் துணைத் தலைவர் பாங் மொக்தார் இன்று மக்களவையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
போக்குவரத்து அமைச்சர் கொங் சோர் ஹா 2012ம் ஆண்டுக்கான விநியோக மசோதாவில் தமது அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தை நிறைவு செய்து வைத்து பேசிய பின்னர் அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா அண்மையில் மலேசிய விமான நிறுவனத்துடன் செய்து கொண்ட பங்குப் பரிமாற்றம் மீது பிஎன் எம்பி- க்கள் பேசிய போது அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
“எனது நிலை மிகத் தெளிவானது. விலங்குக் கூட விவகாரத்தில் அது அம்னோவின் வேலையில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அது தனி நபர்களுடைய வேலைகள். என்னைப் பொறுத்த வரையில் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். ”
“நான் அந்த நபரின் நிலையில் இருந்தால் பதவி துறந்திருப்பேன். அந்த நபர் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார். அந்த நபர் செய்யும் எல்லா காரியங்களும் சீரழிந்து விடுகின்றன.”
” அந்த நபர் அம்னோவைச் சார்ந்தவராக இருந்தாலும் நாம் சரியில்லாததை சரி செய்ய வேண்டும். யார் அந்த நபர்? அந்த நபர் தவறு செய்திருந்தால் அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் சுமையாக இருப்பதை விட பதவி துறப்பது நல்லது.”
“நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இந்த நாட்டை நீதியின் அடிப்படையில் நிர்வாகம் செய்கிறோம்”, என அந்த கினாபாத்தாங்கான் எம்பி மக்களவையில் கூறினார்.
பாங் மொக்தார் ஒர் அமைச்சர் எனக் குறிப்பிட்டுப் பேசினாலும் அமைச்சரது பெயரை அவையில் வெளியிடவில்லை.
‘ராஜினாமா செய்து மன்னிப்புக் கேளுங்கள்’
மலேசியாகினி பின்னர் தொடர்பு கொண்ட போது தாம் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலையே குறிப்பிடுவதை பாங் மொக்தார் உறுதிப்படுத்தினார்.
“அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்”, என்றார் பாங் மொக்தார்.
இன்னொரு கேள்விக்குப் பதில் அளித்த அவர், அந்த விவகாரம் அம்னோ/பிஎன் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதால் ஷாரிஸாட் கூடிய விரைவில் பதவி துறந்து விட வேண்டும் என்றார்.
அவர் அரசாங்கத்திலும் கட்சியிலும் பதவிகளை வகிப்பதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பாங் மொக்தார் வலியுறுத்தினார்.
என்எப்சி விவகாரம் மீது ஷாரிஸாட்டை வெளிப்படையாகக் குறை கூறியுள்ள முதலாவது பிஎன் எம்பி பாங் மொக்தார் ஆவார்.
அதே வேளையில் அந்த சர்ச்சையால் விளைந்த பாதகத்தைக் கட்டுப்படுத்த கைரி ஜமாலுதின் போன்ற பின்னிருக்கை உறுப்பினர்கள் பாடுபட்டு வருகின்றனர்.