நாட்டில் ஊழல்களைத் துடைத்தொழிக்க, ஜொகூர் பட்டத்து இளவரசருக்கு ஆதரவாக இருப்போம் என அமானா கட்சி உறுதியளித்துள்ளது.
துங்கு இஸ்மாயில் வெளியிட்ட அந்த அறிக்கை துணிச்சலான ஒன்று என்றும்; நாட்டில் ஊழலையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் துடைத்தொழிக்க விரும்பும் அவரின் முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அமானா கட்சியின் துணைத் தலைவர் சலாஹூட்டின் ஆயூப் கேட்டுக்கொண்டார்.
“நாட்டில் நேர்மையான நிர்வாக முறையை மீட்டெடுக்க, ஜொகூர் மக்கள் அரச குடும்பத்துடன் இணைந்து செயல்படுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்”, என்று அவர் சொன்னார்.
“ஊழல் குறித்து துணிச்சலாக தனது கருத்தை வெளியிட்ட டி.எம்.ஜே-வுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்”, என்றும் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சலாஹூடின் கூறினார்.
துங்கு இஸ்மாயில் அல்லது டி.எம்.ஜே. என அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஜொகூர் பட்டத்து இளவரசர், மலேசியா ஊழல் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகமற்ற நாடாக உருவாக தாம் பிராத்திப்பதாக ஜொகூர் சௌதெர்ன் டைகர்ஸ் முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இன்று பல அமைச்சர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதைக் காட்டிலும், விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்றும் அந்த நீண்ட செய்தியில் டி.எம்.ஜே. கூறியிருந்தார்.