நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸின் முன்னாள் செய்தி ஆசிரியர் முஸ்தபா கமில். அவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடமும் அவருக்குப் பின் பிரதமர்களாக வந்தவர்களிடமும் செய்தி சேகரித்த அனுபவங்களை முகநூல் பதிவு ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் காலத்திய செய்தியாளர்கள் ‘நல்ல செய்திகளுக்கு’ மகாதிரிடம் செல் என்றுதான் சொல்வார்களாம்.
“அவரிடம் செய்தி சேகரிக்கச் சென்றால் முக்கியமான செய்தியுடன் திரும்பலாம் என்பதுதான் அதன் பொருள்”, என்று முஸ்தபா கூறுகிறார்.
ஆனால், மகாதிரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல்லா அஹ்மட் படாவியிடம் செய்தி சேகரிக்கச் செல்வதென்றால் செய்தியாளர்களுக்கு வயிற்றைக் கலக்கும்.
“நான் துன் அப்துல்லா தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும்போது பாதி நேரம் செய்திகளை எப்படி எழுதத் தொடங்குவது என்று தெரியாமல் தடுமாறுவேன். அப்துல்லா பேசுவது அவருக்கே விளங்குமா என்றுகூட நினைப்பதுண்டு”, என்றாரவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தொடர்பான செய்திகள் சேகரித்த அனுபவத்தையும் விவரித்த முஸ்தபா, அதுதான் தாம் அந்த நாளேட்டிலிருந்து விலகக் காரணம் என்றார்.
“நஜிப் குறித்த செய்திகளை எழுதும்போது நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கும். அது எனக்குப் பிடிக்கவில்லை. விலகி விட்டேன்”, என்றாரவர்.
முஸ்தபா கடந்த ஆண்டு ஏப்ரலில் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சிலிருந்து விலகினார். வால் ஸ்திரிட் ஜர்னல் 1எம்டிபி ஊழல்மீது எழுதியிருந்த விரிவான அறிக்கை அதற்கு முக்கிய காரணம்.
“நீண்ட காலம் அதை எண்ணிப் பார்த்தேன்.
“எங்கோ நியு யோர்க், லோவர் மேன்ஹட்டன் பகுதியில் உள்ள ஒரு அமெரிக்க நாளேடு என் கண்முன்னே நடந்த ஒரு விவகாரம் குறித்து செய்தி எழுதி பிரபலமான புலிட்சர் பரிசுபெற பெயர் குறிப்பிடப்படுகிறபோது நான் இங்கு இதழியல்துறையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது”, என முஸ்தபா தம் முகநூல் பதிவில் கூறினார்.
முஸ்தபா செய்தியாளர்களுக்கு நல்ல செய்திகளைத் தந்தவர் என்று மகாதிரைப் பாராட்டினாலும் 22 ஆண்டுக்காலம் ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட்டு வைத்திருந்ததும் அவர்தான் என்பதை மறந்து விட முடியாது.
1987-இல் அரசாங்க எதிர்ப்பாளர்கள்மீது ஒபராசி லாலாங் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது த ஸ்டார் நாளேடு உள்பட சில ஊடகங்களின் லைசென்சுகள் இரத்துச் செய்யப்பட்டன.
அப்துல்லா, ஊடகங்களுக்கு ஓரளவுக்கு உரிமைகள் கொடுத்தார். 2006-இல் நபிகள் நாயகத்தின் கேலிப்படத்தை வெளியிட்டதற்காக சரவாக் ட்ரிப்யுன் பத்திரிகை மட்டும் மூடப்பட்டது.
2008-இல், வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின், சின் சியு டெய்லி மூத்த செய்தியாளர் டான் ஹூன் செங் ஆகியோர் இப்போது காலாவதியாகிவிட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
நஜிப் அரசாங்கம், 1எம்டிபி விவகாரம் வெளிவந்ததை அடுத்து ஊடகங்களிடம் கடும்போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.
இணைய செய்தித்தளங்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. 1எம்டிபி ஊழல் குறித்து விரிவாக செய்திகள் வெளியிட்டு வந்த தி எட்ஜ் செய்தித்தாள் மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தி எட்ஜ் உரிமையாளர்மீதும் தலைமை செயல் அதிகாரிமீதும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்துகொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணையும் நடந்தது.