2008-ஆம் ஆண்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (ஐஎஸ்ஏ) கீழ் தவறாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டதற்காக டிஏபியின் சிபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக்குக்கு ரிம350,000 இழப்பீடு கொடுக்கும் தீர்ப்பைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.
இழப்பீடு வழங்க முறையீட்டு நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் செய்து கொண்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மெலாஞ்சும் வழக்குக்கான செலவுத் தொகையாக அரசாங்கம் 10 ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அக்குழுவில் இருந்த மற்றுமிருவர் நீதிபதி ஹசன் லாவும் நீதிபதி பாலியா யூசுப் வாஹியும் ஆவர்.