முழுமை பெறும் தருவாயில் பக்கத்தான் ஹராபானின் கட்டமைப்பு

harapanபிகேஆர்,  பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா,  டிஏபி,   பார்டி  அமனா    நெகரா   ஆகிய    எதிர்க்கட்சிகளின்   முக்கிய     தலைவர்களைக்  கொண்ட   பக்கத்தான்  ஹராபான்   ஒரு  அமைப்பாக   உருப்பெறுவது,    தலைவர்களின்   இறுதிக்கட்ட    பேச்சுக்களை   அடுத்து   முழுமை  பெறும்  நிலையில்   உள்ளது.
முன்னாள்   பிரதமர்    டாக்டர்    மகாதிர்    முகம்மட்   கூட்டணியில்    முக்கிய   பங்காற்றுவார்    என   எதிர்பார்க்கப்படுகிறது.   கூட்டணியின்    நிர்வாகத்    தலைவராகக்கூட    அவர்   நியமிக்கப்படலாம்.  அதற்குச்      சிறையில்    உள்ள   பிகேஆர்   ஆலோசகர்   அன்வார்   இப்ராகிமும்   ஒப்புக்கொண்டிருப்பதாக  சில   வட்டாரங்கள் மலேசியாகினியிடம்    தெரிவித்தன.

ஹராபான்  பாரிசான்   நேசனல்   போன்ற   அமைப்பைப்  பெற்றிருப்பதையே   மகாதிர்    விரும்புவதாக    தெரிகிறது.   பிஎன்னில்  அம்னோ  மேலாதிக்கம்   செலுத்துகிறது. அதைப்போல்   இங்கு  பெர்சத்து   விளங்க   வேண்டும்   என்பது    அவரது   விருப்பமாக   இருக்கலாம்.

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைப்   பதவி இறக்கும்   பக்கத்தானின்   முயற்சிக்கு    மகாதிர்      தலைமையேற்பதில்   டிஏபிக்கோ   அமனாவுக்கோ   ஆட்சேபனை   இருக்காது.  ஆனால்,  எதிர்ப்பு   பிகேஆரிடமிருந்து   வரலாம்.

பக்கத்தான்   ஹராபானுக்கு   முன்பு   இருந்த- பிகேஆர்,   டிஏபி,   பாஸ்   ஆகியவற்றைக்   கொண்டிருந்த-   பக்கத்தான்  ரக்யாட்டில்  ஒருமித்த   முடிவெடுக்கும்   முறையே    கடைப்பிடிக்கப்பட்டு    வந்தது.

அதைப்போல்    ஹராபானும்   கருத்தொருமித்துச்   செயல்பட   வேண்டும்  என்றே   அன்வாரும்  பிகேஆரும்   விரும்புவதாகத்     தெரிகிறது.

முடிவில்,  மகாதிரும்    எல்லாக்   கட்சிகளும்   கருத்திணக்கத்துடன்  செயல்படுவதை   ஒப்புக்கொள்வார்  என்றே   எதிர்பார்க்கப்படுகிறது.