அஞ்சா நெஞ்சன் பட்டுவின் நினைவு நாள்! – ‘ஞாயிறு’ நக்கீரன்

pattoஉலகின் மூத்த குடியும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே மொழிக் காப்பிற்காக மன்றம் கண்ட சமுதாயமுமான தமிழினத்தில், தந்தை வழியைப் பின்பற்றும் மக்கள் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்றளவும் தொடர்கின்றனர்.

கடாரத்தை ஆண்ட இராஜேந்திர சோழன் தன் தந்தை இராஜராஜ சோழன் வழியைப் பின்பற்றியவர்; ஆனால் சேர மன்னன் குடும்பத்தில் தோன்றிய இளங்கோ அடிகள் சோதிடனின் கூற்றை முறியடித்து இலக்கியப் பாதையில் பயணித்தவர். அரசியல்-சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள இன்றைய புத்தம்புது உலகிலும் அதைப் போன்ற மக்கள் திகழ்கின்றனர். மலேசியத் திருநாட்டின் மிகப் பெரிய தொழில் புள்ளியான ஆனந்தகிருஷ்ணனின் புதல்வர் ஆன்மிக வழியை நாடியுள்ளார்; மலேசிய அரசியல் வானில் சுடர் விட்ட அஞ்சாநெஞ்சினன் பி.பட்டுவின் மகள் கஸ்தூரி தன்னுடைய தந்தை வழியிலேயே அரசியல் பாதையில் பயணிக்கிறார்.

மணிவிழா காணும் சுதந்திர மலேசிய அரசியலில், எதிர்க்கட்சி வரிசையில் தன்னுடைய தந்தையைப் போல நாடாளுமன்றத்தில் முழங்கும் ஒரே தமிழ்ப் பெண் அரசியல்வாதி கஸ்தூரிதான். அத்தகைய புது பாரம்பரியத்தை உருவாக்கிய கஸ்தூரியின் தந்தை பட்டுவிற்கு இன்று (ஜூலை 12) நினைவு நாள்.

தான் பிறந்த மண்ணின் மனித உரிமைக்காகவும் தொழிலாளர் பாதுகாப்பிற்காகவும் ஜெனிவா பெருநகரில் ஓங்கி முழங்கிய பி.பட்டு, நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமான பேராக்கில் கோப்பெங் சட்டமன்றத் தொகுதியில் இருந்தும் மெங்களம்பு, பாகான் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சிறைக்கு அஞ்சாத அந்த மக்கள் தொண்டன், மக்கள் நலன் ஒன்றையே முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். அரசியல்வாதியான அவர், சிறந்த பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சார்ந்த ஜனநாயக செயல் கட்சியின் மாத இதழான ‘ராக்கெட்’டை திறம்பட நடத்தியவர்.

மலேசிய இந்தியர்களிடமும் சீன சமுதாயத்திலும் செல்வாக்குடன் திகழ்ந்த பி.பட்டுவின் பெயர் மலேசிய அரசியல் வானில் என்றென்றும் நிலைபெற்றிருக்கும்.