“அன்வார் செக்ஸ் வீடியோ பிரதிகள்” பினாங்கு பள்ளிவாசல்களில் விநியோகம்

பினாங்கு செபெராங் பிராயில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு செல்லும் முக்கியமான இடங்களில் கடந்த வாரம் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் செக்ஸ் வீடியோவின் பிரதிகள் வைக்கப்பட்டிருந்ததைத் கண்டு வெள்ளிக்கிழமைத் தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைநிலத்தில் எட்டுப் பள்ளிவாசல்களில் அந்த செக்ஸ் வீடியோவின் 50 பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக குவார் பெராஹு பள்ளிவாசல் தலைவர் அபு பாக்கார் டாகிலினி அபு ஹசான் கூறினார்.

பச்சை நிற மேலுறைகளைக் கொண்டிருந்த அந்த விசிடிக்கள் பள்ளிவாசல்களின் நுழைவாயில்களில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் யார் அதனை வைத்தனர் என்பது யாருக்கும் தெரியவில்லை என அபு பாக்கார் கூறினார்.

அந்த விசிடி-யின் மேல் உறையில் Wasiat Tok Guru and Saksikan (கிளந்தான் மந்திரி புசாரும் பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் நிக் மாட்-டை குறிக்கிறது) என எழுதப்பட்டிருந்ததால் பலர் அந்த விசிடி-க்களை எடுத்துக் கொண்டனர்.

ஆனால் வீட்டுக்குச் சென்றதும், அந்த விசிடி-யை போட்டுப் பார்த்த போது அது அன்வார் சம்பந்தப்பட்டது எனக் கூறப்படும் செக்ஸ் வீடியோ என்பதைக் கண்டு பிடித்தனர் என அபு பாக்கார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

செக்ஸ் வீடியோவுக்கு எதிராக முஸ்லிம்கள் பேரணி

இதனிடையே பள்ளிவாசல்களில் செக்ஸ் வீடியோ பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டதை ஆட்சேபித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவார் பெராஹு பள்ளிவாசலுக்கு அருகில் பேரணி ஒன்றை நடத்தினர்.

செக்ஸ் வீடியோ பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது முஸ்லிம்கள் கொண்டுள்ள ஆத்திரத்தை அந்தப் பேரணி உணர்த்தியதாக அபு பாக்கார் சொன்னார்.

ஆட்சேபக் கூட்டத்துக்குப் பின்னர் அபு பாக்காரும் சுங்கை லெம்பு, குபாங் செமாங் பள்ளிவாசல்களைச் சேர்ந்த தலைவர்களும் குபாங் செமாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்கள்.

“போலீஸ் அந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து பள்ளிவாசல்களுடைய நற்பெயரை நாசப்படுத்தியவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என அவர் மேலும் கூறினார்.