கிளந்தான் மாநில சட்டமன்றம் நேற்று திருத்தப்பட்ட ஷரியா சட்ட மசோதாவை ஏற்றுக்கொண்டது. அச்சட்டம் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் பகிரங்கமாக சவுக்கடி கொடுப்பதற்கு வகைசெய்கிறது.
ஷரியா கிரிமினல் செயல்முறை சட்டம் 2002 (திருத்தம் 2017) நீதிமன்ற விசாரனையின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை அமலாக்க அதிகாரிகள் கைவிலங்கிடுவதற்கும் வீடியோ பதிவுகளை சாட்சியமாக பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது.
ஷரிய சட்ட திருத்த மசோதாவை மாநில இஸ்லாமிய மேம்பாட்டு குழுவின் தலைவர் முகமட் நசருடின் டாவுட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அம்மசோதா சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றிருந்த சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டமன்ற தலைவர் அப்துல்லா யாக்குப் அறிவித்தார்.
சவுக்கடி கொடுக்க வகைசெய்யும் சட்டம் சட்டப்பூர்வமானதா?
கிளந்தான் மாநில சட்டமன்றம் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் சவுக்கடி கொடுப்பதற்கு நேற்று இயற்றியுள்ள சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்று மசீச கேள்வி எழுப்பியுள்ளது.
சவுக்கடி கொடுக்கும் தண்டனை பெடரல் சட்டத்திற்கு ஏற்ப இருந்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆகவே இந்த கிரிமினல் செயல்முறை சட்டம் செல்லுபடியாகது என்று கூறிய மசீசவின் சமய நல்லிணக்க பிரிவின் தலைவர் டி லியன் கெர், “இது பெடரல் அரசமைப்புச் சட்டம் அட்டவணை 9 க்கு முரணானது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.
அட்டவணை 9 இன்படி, ஷரியா நீதிமன்றங்களைத் தவிர்த்து, சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் பெடரல் நீதிபரிபாலனத்திற்கு உட்பட்டவை. .
ஷரியா நீதிமன்றம் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டத்தின் கீழ் ஷரியா நீதிமன்றம் அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறைத்தண்டனை, ரிம5,000 அபராதம் அல்லது ஆறு சவுக்கடி விதிக்கலாம்.
கிளந்தான் மாநில சட்டமன்றம் சட்டம் இயற்றும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட டி, அது பெடரல் சட்டத்திற்கு அப்பால் செல்ல முடியாது என்றார்.