‘ஞாயிறு’ நக்கீரன் – 13.7.2017 – மலேசியத் தமிழிலக்கியப் பூங்காவில் மணம் பரப்ப இன்னுமொரு மலர் நேற்று தலைநகரில் மலர்ந்தது. மலேசியக் கால்பந்துத் துறையில் சாதனை புரிந்த பீட்டர் வேலப்பன் பழனியப்பனின் வாழ்க்கை வரலாற்றை பாங்குற சித்திரிக்கும் இந்த நூலின் மூலம் ஆங்கிலத்தில் பீட்டர் வேலப்பனால் இயற்றப்பட்டது. அதை தமிழில் மொழிமாற்றம் செய்தது ‘நினைவில் வாழும்’ முனைவர் ரெ. கார்த்திகேசு.
தமிழகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அன்றைய மலாயாவிற்கு குடிபெயர்ந்த குடும்பத்தில் தோன்றிய பீட்டர் வேலப்பன், தன்னுடைய பொதுவாழ்க்கையை ஆசிரியராகத் தொடங்கி, பின்னர் கால்பந்துத் துறையில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு சாதனைப் படைத்தவர். 1972-இல் நடந்த மூனிக் ஒலிம்பிக் போட்டி தேர்வுக்கு மலேசியாவை தயார் செய்ய பயிற்றுனராகவும் நிர்வாகியாகவும் செயலாற்றியவர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிலியாவ் தோட்டத்தில் 1935 இல் பிறந்து ஒரு பயந்த சுபாவ சிறுவனாக வளர்ந்து, காலப் போக்கில் உன்னத மனிதராக மிளிர்ந்த வகையெல்லாம் இந்த நூலில் வடிக்கப்பட்டுள்ளன. இன்றைய இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் படித்தறிய வேண்டிய பாடப்புத்தகம் போன்ற இந்நூல், பொதுவாக அனைவரும் கற்க வேண்டிய நந்நூல்.
மலேசியக் கால்பந்து சங்க துணைச் செயலராகவும் மலேசிய ஒலிம்பிக் தேர்வுக் குழு நிருவாகியாகவும் பணியாற்றியுள்ள பீட்டர் வேலப்பனின் வாழ்க்கை ஓவியத்தை படம் பிடித்துள்ள இப்புத்தகம், மலாயா சுதந்திரம் பெற்ற காலத்து வாழ்க்கைச் சூழலை தெளிவாக விவரிக்கிறது.
1978இல் ஆசிய காற்பந்து சம்மேளத்தின் பொது செயலாளராக பதவியேற்று, முதன் முறையாக உலக காற்பந்து கோப்பைக்கான போட்டியை ஆசியாவில் நடைபெற வழிவகுத்த பெருமை இவரைச்சாரும். 2002-இல் தென்கொரியா–சப்பான் நாடுகள் நடத்திய அப்போட்டியில் பிரேசில் வென்றது. அக்கால கட்டத்தில் ஆசிய காற்பந்து விளையாட்டாளர்கள் தெம்பில்லாதவர்கள் என்று சாடி வம்பு செய்தவரும் இவர்தான்.
தேசிய நில நிதி கூட்டுறவு கண்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரிய ஆதரவில் இந்த இலக்கியப் படைப்பு கருவும் திருவும் கொண்டு அதே வரியத்தின் ஆதரவில் நேற்று புதன்கிழமை மாலையில் டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் வெளியிடப்பட்டது. கூட்டுறவு சங்க தலைமை நிருவாகியும் பொதுச் செயலருமான டத்தோ .சகாதேவன் தலைமையுரை ஆற்றி இந்த நூலை வெளியீடு செய்தார். கூட்டுறவு சங்கப் பணியாளர் கரு.பன்னீர் செல்வத்தின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் நூலாசிரியர் பீட்டர் வேலப்பன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூல் இலவயமாக வழங்கப்பட்டது.
நல்லதோர் படைப்பு , கூட்டுறவு கழகத்திற்கு பாராட்டுகளும் நன்றியும் . மேலும் நமது நாட்டில் விளையாட்டு துறையிலும் ! மற்ற துறைகளிலும் வெட்ரி பெற்ற நமது இந்திய சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகள் நமது எதிர்கால சந்ததியனர்க்கு சரித்திரமாக எழுத பட்டு காக்க பட வேண்டும் . பலம் பெருமைகளை பேசி கொண்டிருப்பதை விடுத்து நமது பெருமைகளும் வெட்ரியும் பதிவு செய்யப்பட வேண்டும் .