மஇகா முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டுகிறதா? அப்படி எதுவும் இல்லை என்கிறார் இளைஞர் தலைவர்

micதொகுதி   இளைஞர்   தலைவர்  ஒருவர்  மஇகாவில்   முஸ்லிம்களிடம்   பாகுபாடு  காட்டப்படுவதாகக்  கூறியிருப்பதை அபத்தமான   பேச்சு   என்று   மஇகா   தலைவர்    சி.சிவராஜ்     நிராகரித்துள்ளார்.

“அது  உண்மை  அல்ல.  கட்சியில்   10  விழுக்காட்டுக்குமேல்   முஸ்லிம்கள்   உள்ளனர்…….அப்படி   எதுவும்    நடந்ததில்லை”,  என  சிவராஜ்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

தெப்ராவ்  மஇகா  இளைஞர்    தலைவர்   முகம்மட்  டேனியல்   அப்துல்லா,   கட்சியில்    இன,  சமய   வேறுபாடு   காட்டப்படுவதாகவும்    அதனால்   தன்  பதவியைத்   துறந்து  விட்டதாகவும்   கூறியிருப்பதற்கு   எதிர்வினையாக   சிவராஜ்   இவ்வாறு   கூறினார்.

தெப்ராவில்   தான்  சமூகத்  தலைவராக  விரும்பியபோது   தொகுதித்   தலைவர்கள்  தனக்கெதிராக  இனவெறுப்புக்   கருத்துக்களை   வெளியிட்டதாக   முகம்மட்  டேனியல்    கூறியிருந்தார்.

“நான்  முஸ்லிம்   என்பதால்  அது(இந்திய  சமூகத்   தலைவர்)  ஆக  முடியாது   என்றும்  பதவி   வேண்டுமானால்   மதம்   மாற   வேண்டும்   என்றும்   சொன்னார்கள்”,  என்றவர்  கூறியதாக    சினார்   ஹரியான்  நேற்று    செய்தி   வெளியிட்டிருந்தது.

அவருடன்  தெப்ராவ்   மஇகா    இளைஞர்   பிரிவைச்   சேர்ந்த    மேலும் ஐவரும்  நேற்று  பதவி   துறந்தனர்.