கிட் சியாங்: நாடாளுமன்றத்தில் 1எம்டிபி சிறப்பு விவாதத்தை நஜிப் நடத்த வேண்டும்

 

1MDPdebateசிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங்கைப் பாருங்கள். அவரைப் போல் மலேசிய நாடாளுமன்றத்தில் 1எம்டிபி மீது ஒரு விவாதத்தை மூன்று நாள்களுக்கு நடத்த ஏற்பாடு செய்யும்படியும், அதில் கலந்துகொள்ள தொழில் அதிபர் ஜோ லோவை அழைக்கும்படியும் பிரதமர் நஜிப்பை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.

அந்த விவாதம் ஜூலையில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிய அவர், அதை ஜூலை 24 லிருந்து ஜூலை 26 வரையில் நடத்தலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

மேலும், இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஜோ லோவை பிரதமர் நஜிப் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஜோ லோ பங்கேற்று உரையாற்றவும், 1எம்டிபி பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கும் ஏற்பாடு செய்வதில் பிரச்சனை ஏதும் இல்லை என்று கிட் சியாங் இன்று வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் கூறுகிறார்.

இந்த ஒரு சிறப்பு நாடாளுமன்ற விவாதத்திற்கு ஏற்பாடு செய்வதன் வழி பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என்றாரவர்.

ஜோ லோ தாம் நிரபராதி என்கிறார். அப்படியானல் ஏன் அவர் தலைமறைவாகி இருக்கிறார்?

பிரதமர் நஜிப் அவரது வெளிநாட்டுப் பயணங்களின் போது ஜோ லோவை இரகசியமாகச் சந்தித்துள்ளார் என்கிறார்கள்.

பத்து நாடுகள் நஜிப்புக்கு எதிரானச் சதித் திட்டங்கள் தீட்டுகின்றன என்கிறார்கள்.

1எம்டிபி என்ற ஒன்றே கிடையாது. இது பிரதமரின் எதிரிகளால் அவரைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை என்றும் கூறுகிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் விடை கிடைக்க நாடாளுமன்றத்தின் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நஜிப்பின் விவகாரம் வெளிச்சத்திற்கு வரும்; ஆடையில்லாத நவீன காலச் சக்கரவர்த்தி என்று நஜிப் எள்ளிநகையாடப்படுவார் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.