சிங்கப்பூரில் மரண தண்டனை வித்திக்கப்பட்டிருக்கும் எஸ். பிரபாகரன், 29, நாளை காலையில் தூக்கிலிடப்படுவார். தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் அவரது மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து இன்று மாலை மணி 5 அளவில் தீர்ப்பளித்தது என்று பிரபாகரனின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார்.
பிரபாகரன் வழக்கு சம்பந்தமாக சிங்கப்பூரை அனைத்துலக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரும் மனு இன்னும் மலேசிய மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செய்துகொண்ட மனுவை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆகையால், இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சுரேந்திரன் தொடர்பு கொண்ட போது மலேசியகினியிடம் கூறினார்.
பிரபாகரனை அவரது குடும்ப உறுப்பினர்கள் நீதிமன்ற வளாகத்தில் கடைசிமுறையாக இன்று சந்தித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபாகரன் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமையடைவதற்கு முன்பு அவர் தூக்கிலிடப்படுவது அனைத்துலக சட்டத்தையும் பிரபாகரனின் அடிப்படை உரிமையையும் பகிரங்கமாக அவமானப்படுத்துவதாகும் என்று சுரேந்திரன் கூறினார்.
இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு விரலைக்கூட அசைக்காமல் அமைதியாக இருந்து வந்தது குறித்து தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சுரேந்திரன் மேலும் கூறினார்.