மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் முகமட் நசீர் ஹசிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று நடந்துமுடிந்த கட்சி உள்தேர்தலில், டாக்டர் நசீர் பெரும்பான்மை பேராளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு பெற்றார்.
சிரம்பானில் நடந்த கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில், 2017/2019-ம் ஆண்டுக்கான புதிய செயலவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சரஸ்வதி முத்து மீண்டும் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராஜன் ஆறுமுகம் தலைமை செயலாளர் பதவியைத் தக்க வைத்துகொண்டார். வழக்குரைஞர் கே.எஸ்.பவாணி கட்சியின் புதிய துணைச் செயலாளராகத் தேர்வு பெற்றார். பொருளாளர் பதவிக்கு சோ சொக் ஹ்வா மீண்டும் தேர்வு பெற்றார்.
9 மத்தியச் செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு, 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் மற்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மத்திய செயலவைக்குத் தேர்வானவர்களில் அடங்குவர். கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக காலிட் இஸ்மாத் தேர்வு பெற்றார்.
மலேசியாவில் பாட்டாளி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தொடக்க காலம் முதல் இன்று வரை போராடி வரும் ஒரே கட்சியாக பி.எஸ்.எம். விளங்குகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயலாளர் ஆ.சிவராஜன் தெரிவித்தார். மேலும், இத்தேர்தலில் தங்கள் கட்சியின் கைச் சின்னத்திலேயேப் போட்டியிடவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
நல்ல தேர்வு! உங்களது போராட்டங்கள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். ஏனைய எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர முயற்சி செய்யுங்கள்.