பெல்டா வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் பக்கத்தான் ஹராபானின் நோக்கம் வெறும் கனவாகத்தான் முடியப்போகிறது என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்.
அவர்களின் கனவு ஈடேறாது. பெல்டா வாக்காளர்கள் தங்களின் நலனைக் கவனித்துக்கொள்வது அம்னோ-பிஎன் கூட்டணியே என்றே முழுமையாக நம்புகிறார்கள் என சாலே குறிப்பிட்டார்.
“பெல்டா வாக்காளர்கள் ஆளும் கட்சியை ஆதரிப்பதால், 14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபான் பெல்டா இடங்களில் வெற்றிபெறுவது சிரமமாக இருக்கும்.
“அம்னோவால் வழிநடத்தப்படும் ஆளும் கட்சி அவர்களுக்கு நிதி உதவி, உதவித்தொகைகள், ஆண்டு போனஸ் முதலியவற்றையும் வேறு பல உதவிகளையும் செய்திருப்பதால் அவர்கள் ஆளும் கட்சிக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.
“அந்த நன்றிக்கடன்தான் ஆளும் கட்சியே நாட்டை ஆள்வதற்குச் சிறந்த கட்சி என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது”, என்றாரவர்.

























