தேர்தலில் நஜிப்புக்கு உதவவே ஆர்சிஐ-க்கு மூன்றுமாத காலவரை

limபொதுத்   தேர்தலில்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டை    எதிர்ப்பதற்குப்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கு     உதவுவதற்காகவே  பேங்க்   நெகாராவின்  அன்னிய   செலாவணி  வணிகத்தில்    ஏற்பட்ட   இழப்புகளை   விசாரிக்க   அமைக்கப்பட்டிருக்கும்   அரச   ஆணையம்  (ஆர்சிஐ)   மூன்று  மாதங்களில்   விசாரணையை   முடிக்க    வேண்டும்    என்று   காலவரையறை   நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக   லிம்   கிட்  சியாங்   நினைக்கிறார்.

நேற்று   ஆர்சிஐ    உறுப்பினர்கள்   பெயர்களை     அறிவித்த    அரசாங்கம்    அது  மூன்று  மாதங்களில்      பேரரசரிடம்    அறிக்கையைச்   சமர்ப்பிக்க     வேண்டும்   என்றது.

அந்த     அறிவிப்பு    வெளிவருவதற்கு  முன்பே,   தேர்தல்     ஆண்டின்   பிற்பகுதியில்    நடக்கும்    சாத்தியம்    இருப்பதாக    லிம்   கூறினார்.

1999-இல்  மகாதிர்    பட்ஜெட்   தாக்கல்     செய்யப்பட்ட   இரண்டாவது    வாரத்தில்    நாடாளுமன்றத்தைக்   கலைத்ததுபோல்   நஜிப்பும்    செய்யக்கூடும்     என  டிஏபி   மூத்த   தலைவர்   கூறினார்.

பல      அண்டுகளுக்கு   முன்னால்  மகாதிர்   ஆட்சியில்    நிகழ்ந்த    ஒரு  சம்பவம்மீது    இப்போது   விசாரணை    செய்வது   நஜிப்பின்   பழி   வாங்கும்    எண்ணத்தைக்   காண்பிப்பதாக   மகாதிரும்    அவரின்    ஆதரவாளர்களும்      குற்றஞ்சாட்டுகிறார்கள்.  அது   1எம்டிபி   ஊழலிலிருந்து   கவனத்தைத்    திசை   திருப்பும்   முயற்சி   என்கிறார்கள்.

1எம்டிபிமீதுதான்   ஆர்சிஐ  அமைக்கப்பட    வேண்டும்     என்பது    அவர்களின்   கருத்து.

இதே  கருத்தையே   லிம்மும்    எடுத்துரைத்தார்.  “கால்    நூற்றாண்டுக்கு   முன்பு   பேங்க்   நெகராவின்   அன்னிய   செலாவணி   இழப்புகளில்    ஏற்பட்ட   இழப்பு   குறித்து   ஒளிவுமறைவற்ற    விசாரணை   நடத்தப்படுகிறது    ஆனால்,   பணக்  கையாடலில்   உலக   அளவில்   மலேசியாவைப்   பிரபலப்படுத்தியுள்ள     1எம்டிபி   குறித்து  ஒளிவுமறைவற்ற      விசாரணை   இல்லாதது    ஏன்?”,  என்றவர்   வினவினார்.
இது   நஜிப்,   அமைச்சரவை,   அவரின்   சட்டத்துறைத்    தலைவர்   ஆகியோரின்  அதிகாரமீறலுக்கு    மற்றுமோர்    எடுத்துக்காட்டு.

“நஜிப்பும்  அவரது   அமைச்சரவையும்   1எம்டிபி   ஊழல்மீதும்   ஒரு   ஆர்சிஐ   அமைத்து  அதன்  விசாரணையும்   மூன்று   மாதங்களில்    முடிவுக்கு  வர   வேண்டும்    எனக்   காலவரை  கொடுக்க   வேண்டும்”,   என  லிம்  கூறினார்.