மகாதிர்: பொதுத்தேர்தலில் ஹரப்பான் வெல்லும், ஆனால் நஜிப் மோசடி செய்வார்

 

Mconfidentஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறும் என்று மகாதிர் முகம்மட் நம்புகிறார். ஆனால், பிரதமர் நஜிப் நியாயமாக நடந்து கொள்ளமாட்டார் என்று அவர் கவலைப்படுகிறார்.

“நாம் காண்பதிலிருந்து நமக்கு வலுவான ஆதரவு இருக்கிறது. ஆனால், நஜிப் சட்டவிரோதமான பல வழிகளைப் பயன்படுத்தி தமது பதவியை நிலைநிறுத்திக்கொள்வார்.

“நமக்கு இருக்கிற ஒரே பிரச்சனை நஜிப் மோசடி செய்வார், இலஞ்சம் கொடுப்பார் மற்றும் பலவிதமானவற்றை செய்து அவரது தலைமைத்துவத்தை நிலைநிறுத்திக்கொள்வார், ஏனென்றால் அவர் பிரதமர் பதவியில் இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் மற்றும் சிறைக்குப் போவார்”, என்று முகநூல் நேரடி நிகழ்ச்சியில் மகாதிர் கூறினார்.

அம்னோ முன்புபோல வலுவாக இல்லை என்று கூறிய அவர், நஜிப்பை வீழ்த்த விரும்பும் எனது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தாய்லாந்தின் நேசன் பல்லூடக குழுமத்தின் தலைவர் சுதிசாய் யூனிடம் மகாதிர் கூறினார்.

முக்கோண போட்டியில், எதிரணி தோற்கக்கூடும். ஆனால் அந்த இஸ்லாமிய கட்சி அதன் முன்னாள் எதிரியுடன் சேர்ந்துள்ளதால் அது மக்களின் ஆதரவை இழந்து வருகிறது என்றும் மகாதிர் தெரிவித்தார்.

முக்கோண போட்டி இருக்கும். ஆனால், அதில் மூன்றாவது கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் மிகக் குறைவானதாகவே இருக்கும் என்பதால், நஜிப்புக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

சாபா அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதெல்லாம் பழைய கதை. அங்குள்ள கிராமப்புற மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பார்டி பெர்சத்து நிறுவப்பட்டது. நாங்கள் அவர்களுடன் அடிமட்ட நிலையில் சந்திப்பு நடத்தி வருகிறோம். 1எம்டிபியைவிட அவர்களுக்கு வேண்டியது அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம். அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்று மகாதிர் கூறினார்.