ஷாரிசாத்: பக்காத்தான் ஹராப்பான் தலைவராக மகாதீர் நியமனம் ஒரு ‘நாடகம்’

TAN SRI SHAHRIZAT ABDUL JALILபக்காத்தான் ஹராப்பானின் தலைவராக டாக்டர் மகாதிர் நியமனம், எதிர்க்கட்சி கூட்டணி அரங்கேற்றும் ஒரு ‘நாடகம்’ என அம்னோ மகளிர் பிரிவு தலைவி,  ஷாரிசாத் அப்துல் ஜாலில் வர்ணித்தார்.

இன்று, ஜொகூர் கேலாங் பாத்தாவில், அம்னோ மகளிர் பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்தப்பின், செய்தியாளர்களிடையே அவர் பேசினார்.

உண்மை நிலையை மலாய் வாக்காளர்களின் கண்களிலிருந்து மறைக்கவே, அந்த முன்னாள் பிரதமரும் அம்னோ தலைவருமான மகாதீர் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“நாம் கூர்ந்து கவனித்தோமானால், பக்காத்தான் ஹராப்பானின் உண்மையான தலைவர் லிம் கிட் சியாங்தான்,” என்று ஷாரிசாத் கூறினார்.

“இதற்குப் பின்னால் கிட் சியாங் ஒளிந்திருக்கிறார், காரணம், மலாய் வாக்காளர்களின் ஓட்டுகளைக் Mahathir+Kit-Siangகவர்வது கடினம் என அவருக்குத் தெரியும். அதனால்தான், எதிர்க்கட்சி கூட்டணியில் மலாய் தலைவர்களும் இருக்கிறார்கள் என்ற உணர்வை மலாய்க்காரர்களிடையே ஏற்படுத்த இது போன்ற நாடகங்களை அவர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்,” என அவர் மேலும் விளக்கமளித்தார்.

“உண்மையில் ஜ.செ.க.தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்பதால் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்றால், மலேசியாவை வழிநடத்த அவர்கள் ஜசெக-வைத் தேர்வு செய்கிறார்கள் என்று அர்த்தம்.”

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஜொகூரில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனும் அம்னோ மகளிர் பிரிவின் விருப்பம் குறித்து கருத்துரைக்கையில், “மாநில அம்னோ தொடர்புக்குழுவிடம் இது பற்றி தெரிவித்துள்ளேன், அவர்கள் அதனைக் கருத்தில் கொள்வதாக உறுதியளித்துள்ளனர்”, என்று ஷாரிசாத் தெரிவித்தார்.

கடந்த 13-வது பொதுத் தேர்தலில், ஜொகூர் மாநிலத்தில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் அம்னோ மகளிர் வேட்பாளர்கள் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. – பெர்னாமா