குடும்ப வதைச் சட்டத்தில் புதிய மாற்றங்கள் தாக்கல், மலேசிய சோசலிசக் கட்சி வரவேற்கிறது

சரஸ்-போட்ரேட்எதிர்வரும் திங்கட்கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குடும்ப வதைச் சட்டத்தில் சில புதிய சட்டத் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதை, தாம் வரவேற்பதாக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைத்  தலைவர் மு.சரஸ்வதி  கூறியுள்ளார்.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முயற்சியில், இரண்டாவது முறையாக நாடாளுமன்ற வாசிப்பில், அப்புதிய சட்டத் திருத்தம்  தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

குடும்ப உறவுகளில் ஏற்படும் பிணக்குகள் , உடல் ரீதியிலான வதைகள், மன அழுத்தம், மணமுறிவு காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத்  தீர்வு காண, போதுமான சட்ட பாதுகாப்பு மற்றும் நிறைவான அமுலாக்க வழிவகைகள் இல்லாத நிலையை, இந்தப் புதிய சட்ட மாற்றத்தில் அத்தியாவசியமான ஒன்றாக குறிப்பிட வேண்டுமென பி.எஸ்.எம். கருதுவதாக சரஸ்வதி கூறினார்.

2013- ஆம் ஆண்டு முதல், இந்த மாற்றங்களைக்  கொண்டு வர,  குடும்ப நல மேம்பாட்டு அமைச்சோடு, நமது நாட்டில் உள்ள பல மகளிர் இயக்கங்கள், வழக்கறிஞர் மன்றம் மற்றும் அதன் சார்புடைய பல இயக்கங்கள் போராடி வருகின்றன. இவர்களின் விடாமுயற்சியே இன்று இந்த மேம்பாட்டிற்கு மூல காரணமாகும் என அவர் விளக்கப்படுத்தினார்.

“காவல்துறையின் புள்ளி விவரங்களின்படி,  2014 -ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை 15,617 குடும்பவதை சம்பவங்கள் புகார் செய்யப்பட்டுள்ளன.  இதில், 2015 -ஆம் ஆண்டில், புகார் செய்யப்பட்ட 5,100 குடும்பவதைகளில் பாதிக்கப்பட்டவர்களில், 26 %  ஆண்களும் அடங்குவர் என்பதும்  இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்தக் குடும்பவதைச்  சட்டமானது  பாதிப்புக்குள்ளாகும் இருபாலருக்கும் உரிய ஒன்றாக அமையும்”,  என அவர் மேலும் விளக்கினார்.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின் வழி, குடும்பவதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடனடி குடும்பவதைபாதுகாப்பிற்கு, அருகாமையில் உள்ள சமூக நல இலாகாக்களுக்கு நேரிடையாகச் சென்று புகார் செய்யலாம். புகார் செய்த இரண்டு மணி நேரத்தில், விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, ஓர் அவசரப் பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த உத்தரவு ஏழு நாட்கள் வரை அமலில் இருக்கும்.  அந்தக் காலக்கட்டத்தில் புகார்தாரர் அடைக்களம் உள்ள இடத்திற்கு அருகாமையில் செல்வதற்கு இந்த உத்தரவு தடைவிதிப்பதோடு,  அவரைத் தொடர்பு கொள்ளவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்பதற்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இதனைப் பலப்படுத்துவதற்கும்,  அதற்கான தக்க நடவடிக்கைகள்  எடுப்பதற்கும், விசாரணையின் மேம்பாட்டினைப்  புகார்தாரருக்குத் தெரிவிக்க போலீசார் தன் பங்கினை ஆற்றுவதற்கும் இதில்  வலியுறுத்தப்பட்டுள்ளது என சரஸ் கூறினார்.

“அதேவேளையில், அவசரக் காலக்கட்டத்தில் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி  வாயிலாக, குடும்பவதைப் புகாரினைச் செய்வதற்கும் இந்தப் புதிய சட்டத்திருத்தம் வழிகோளும். முன்புபோல் போலீஸ் புகார் செய்ய வேண்டிய அவசியமில்லை. உளவியல் மற்றும் மனரீதியில் எழும் பாதிப்புகளுக்கும் , குடும்ப சொத்துக்கள் மற்றும் தவறான முறையில் அதன் நிதியினை கையாளுவதைத் தடுக்கும் கூறுகளும், இந்தப்  புதிய சட்ட மாற்றத்தில் அடங்கியுள்ளன. ஆகவே, இந்தப் புதிய மாற்றம் பல வகைகளிலும் குடும்பவதைப்  பிரச்சனைகளைக்  குறைப்பதோடு  பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் வழிவகுக்கும்”, என பி.எஸ்.எம்.-ன் தேசியத் துணைத்தலைவர் மு.சரஸ்வதி நம்பிக்கை தெரிவித்தார்.