அரசாங்கத்திடம் 1எம்டிபி தொடர்பாக விளக்கம் பெறும் முயற்சி பலிக்கவில்லை. மக்களவை, அவ்விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 30-க்கு மேற்பட்ட கேள்விகளை நிராகரித்து விட்டது.
1எம்டிபி விவகாரத்தில் அன்னியர் தலையீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா, அமெரிக்க நீதித்துறையின் 1எம்டிபி-தொடர்பான வழக்குகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன போன்ற கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்தனர்.
வைரநகை உள்பட பறிமுதல் செய்யப்பட்ட பணம், சொத்துகள் திரும்பக் கொடுக்கப்பட்டால் அரசாங்கம் ஏற்குமா என்ற கேள்விக்குக்கூட பதில் அளிக்க இயலாது என டேவான் ரக்யாட் கூறிவிட்டது.
இதனால் எதிரணி எம்பிகள் அனைவரும் எழுந்து ஒட்டுமொத்தமாக தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.
கோபிந்த் சிங் டியோ (டிஏபி- பூச்சோங்), அவ்விவகாரம் தொடர்பில் எல்லாக் கேள்விகளையும் அப்படியே புறக்கணிப்பது முறையல்ல என்றார்.
“கேள்வி கேட்பதைத் தடுத்து (1எம்டிபி ஊழலை) மூடிமறைக்க இயலாது”, என்றாரவர்.
பதிலுக்கு பிஎன் எம்பிகள் லிம் குவான் எங்(டிஏபி- பாகான்)கின் பங்களா விவகாரம் குறித்து பேசினர்.
பங் மொக்தார் ரடின், லிம்மின் பங்களா தொடர்பாக தாம் தாக்கல் செய்த கேள்வி, விவகாரம் நீதிமன்றம் சென்றிருப்பதால் நிராகரிக்கப்பட்டது என்றார்.
“நான் அது குறித்து கூச்சல் போடவில்லையே. அவைத்தலைவரின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டேனே”, என்றவர் சொன்னார்.
அவைத் துணைத் தலைவர் இஸ்மாயில் முகம்மட் சைட், கேள்விகள் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தவர்கள் மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்யலாம் என்றார்.
முந்திய நாடாளுமன்றக் கூட்டங்களில்கூட 1எம்டிபி தொடர்பான கேள்விகள் சில நிராகரிக்கப்பட்டது உண்டு. ஆனால், இப்போது நடந்துள்ளதுபோல் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டதில்லை.