ஹிசாமை லங்காவியில் போட்டியிட சவால் விடுகிறார் மகாதிர்

 

MchallengesHஅடுத்த பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வருமாறு தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான ஹிசாமுடின் ஹுசேனுக்கு முன்னாள் பிரதமர் மகாதிர் சவால் விட்டுள்ளார்.

தற்போது பிரதமர் நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியாக இருக்கும் பெக்கானில் போட்டியிட வருமாறு ஹிசாம் விடுத்திருந்த சவாலுக்கு எதிர்வினையாற்றிய மகாதிர் இவ்வாறு கூறினார்.

இன்று பின்னேரத்தில், நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர், பெக்கான் பேய்கள் இருக்கும் தொகுதி; அது தேர்தல் தொகுதியல்ல என்றாரவர்.

அந்தத் தொகுதியில் வாக்காளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், அதாவது ஆவி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

பெக்கான் ஒரு விசித்திரமான தொகுதி. ஒரு சமயத்தில், அவருடைய வாக்காளர்கள் 15,000 பேர்…அடுத்தத் தேர்தலின் போது, அவரது வாக்காளர்களின் எண்ணிக்கை 80,000 க்கு உயர்ந்தது. எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியவில்லை என்று மகாதிர் மேலும் கூறினார்.

கடந்த வாரம், தாம் பெக்கானில் போட்டியிடும் சாத்தியம் பற்றி மகாதிர் குறிப்பிட்டிருந்தார்.

மகாதிர் அங்கு போட்டியிட வந்தால், நஜிப்பை அத்தொகுதியில் தற்காக்க ஒட்டுமொத்த பிஎன் தலைமைத்துவமும் அத்தொகுதியில் களமிறங்கும் என்று ஹிசாமுடின் கூறினார்.