தி.சி.பி. சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்

tasek 1முறையான காரணங்கள் ஏதும் கூறாமல், தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த, தாசேக் சிமெண்டு பெர்ஹாட் (தி.சி.பி.) குழுமத்திற்கு எதிராக, தீபகற்ப மலேசியா சிமெண்டு தொழிற்சாலை தொழிலாளர் சங்க (கே.பி.பி.பி.எஸ்.) , தாசேக் கிளையினர் உதவியுடன் தொழிலாளர்கள் இன்று காலை ஒரு மறியலில் இறங்கினர்.

ஈப்போ, தாசேக் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தி.சி.பி. நிறுவனம் 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. இங்கு சுமார் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், இவர்களில் 150 வங்காளதேசத் தொழிலாளர்களும் அடங்குவர்.

தி.சி.பி. குழுமம் அதன் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாக, கடந்த ஜூன் 6, 2017-ல் அக்குழுமத்தின் மனித வள இயக்குநர் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, கே.பி.பி.பி.எஸ். தாசேக் கிளையினருடன் ஒரு சந்திப்புக் கூட்டமும் நடந்தது.

சிமெண்ட் தயாரிப்பாளர்கள் மத்தியில் விலை ஆக்கிரமிப்பு, கட்டுமானத் துறையின் மந்தமான சூழல், தொடர்ந்து சில மாதங்களாக வியாபாரத்தில் நஸ்டம் ஏற்பட்டது போன்ற காரணங்களுக்காக, தாங்கள் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தொழிற்சாலை நிறுவனம் காரணம் கூறியது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே அந்நிறுவனம் தொழிலாளர்களை ‘விருப்பப் பணிவிலகல் திட்டம்’ Slide1(வி.எஸ்.எஸ்.) அடிப்படையில் சுயமாக வேலையிலிருந்து நிற்கச் சொல்லி வற்புறுத்தி வருவதாக தெரியவருகிறது. அதன் காரணமாக, சுமார் 20 தொழிலாளர்கள் கடந்த பிப்ரவரியில் வேலையிலிருந்து நின்றுகொண்டனர். ஆனால், மற்றவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததால், தொழிலாளர்களிடையேக் குற்றங்குறை காண அந்நிறுவனம் முற்பட்டதாகவும் சில தொழிலாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

முன்னதாக, திசிபி குழுமத்தின் இம்முடிவை கே.பி.பி.பி.எஸ். எதிர்த்ததோடு, மனித வள அமைச்சின் வழிகாட்டி குறிப்பினைக் கடைப்பிடிக்கும்மாறும் கேட்டுக்கொண்டது. மேலும், பிப்ரவரி 9,1975-ம் ஆண்டு, மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ், தொழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சர், டத்தோ லீ சான் சூன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட தொழிற்துறை இணக்க நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டது என கே.பி.பி.பி.எஸ்.-இன் துணைத் தலைவர் செல்வதுரை தெரிவித்தார்.

ஜூன் 6-ம் தேதி நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில், அந்நிறுவனம் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைய கே.பி.பி.பி.எஸ். தாசேக் கிளை, சில ஆலோசனைகளை வழங்கியது. அவை :-

  1. புதிய தொழிலாளர்களைப் பணியமர்த்தக் கூடாது
  2. கூடுதல் வேலை நேரம் கூடாது
  3. வார இறுதி ஓய்வு நாளில் வேலைசெய்ய பணிக்கக் கூடாது
  4. வார வேலை நாட்களைக் குறைத்தல்
  5. வேலை நேரத்தைக் குறைத்தல்
  6. வேலை பயிற்சி அல்லது மற்ற துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல்

தி.சி.பி. குழுமம் இந்த ஆலோசனைகளைப் பரிசீலிக்க ஒப்புக்கொண்டதோடு, இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாகவும் கூறியிருந்தது.

“இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை, நேற்று, ஜூலை 23-ல் நடந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே, தி.சி.பி. தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய ஒருதலைபட்சமாக முடிவெடுத்திருந்தது,” என செல்வதுரை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Slide2வேலை நேரத்தில் ஒழுங்காக பணியாற்றவில்லை, அதிகமான விடுமுறை எனப் பல காரணங்களை முன்வைத்து, இன்று 10 தொழிலாளர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்ததோடு; நாளை இன்னும் 9 பேரை வேலையிலிருந்து நீக்க இன்று கடிதமும் கொடுத்தது.

பணி நீக்கம் செய்ய அவர்கள் கையாண்ட அடிப்படை விதிகள், தொழிலாளர்களின் பெயர்கள், அவர்கள் பணியாற்றியப் பிரிவுகள் எதனையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. தங்களுடன் கலந்துபேசாமல், தன்னிச்சையாக அவர்கள் செயல்பட்டது தொழிற்சங்கத்தை அவமதிப்பதாக உள்ளதாக செல்வதுரை, தமதறிக்கையில் கூறியுள்ளார்.

ஆகவே, தி.சி.பி. நிறுவனத்தின் தன்மூப்பான செயலைக் கண்டிக்கவே இன்று இந்த மறியல் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேலும், அந்நிறுவனம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என கே.பி.பி.பி.எஸ். நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.