பக்கத்தான் ஹராபான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக முடியாது என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் மகாதிர் பிரதமராவதற்கு ஒருகாலும் இடம்கொடுக்க மாட்டார்கள். மகாதிர் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள்.
“மேலும், பக்கத்தான் மகாதிர் திரும்பவும் வருவார் என்று சொல்லி வாக்காளர்களிடம் வாக்குகளைக் கேட்க முனைந்தால் அது தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்பாகும்”, என சாலே அவரது வலைப்பதிவில் கூறியிருந்தார்.
92வயதாகும் மகாதிர் மீண்டும் பிரதமராக முடியும் என்று நம்பினால் அவர் உண்மை நிலவரத்தை உணராதவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
சாலே 2004 பொதுத் தேர்தலை மகாதிருக்கு நினைவுபடுத்தினார். மகாதிர் பதவி விலகிச் சென்று ஓராண்டு ஆன பின்னர் நடந்த அந்தத் தேர்தலில்தான் பிஎன் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது.
மகாதிர் விலகிச் சென்று விட்டார் என்ற மகிழ்ச்சி வாக்காளர்களுக்கு என்றார் சாலே.
மகாதிருக்குப் பிரதமர் பதவி என்று கூறுவதெல்லாம் பொய். அவர் தொடர்ந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தாக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்லி வருகிறார்கள் என்றாரவர்.