ஒரு கிமீ நெடுஞ்சாலை போடுவதற்கு ரிம385 மில்லியனா?, பினாங்கு மசீச இளஞர் சீற்றம்

 

onekilometerபினாங்கு மாநில அரசு மலேசியாவிலேயே மிக அதிகச் செலவிலான நெடுஞ்சாலையை – பேன் ஐலேண்ட் லிங்க் 1 – அமைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக பினாங்கு மசீச இளைஞர் பிரிவு மாநில அரசை சாடியுள்ளது.

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சௌ கோன் இயோ வெளியிட்டுள்ள தகவல்படி 19.5 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைப்பதற்கு ரிம7.5 பில்லியன் செலவாகும். அது ஒரு கிலோ மீட்டருக்கு ரிம385 மில்லியன் என்றாகும் என்று அந்த இளைஞர் பிரிவு தலைவர் மைக்கல் லீ கூறினார்.

இது சிலாங்கூரில் கின்றாரா-டாமன்சாரா விரைவு சாலை (கிடெக்ஸ்) அமைப்பதற்கு ஆகும் செலவைவிட 140 விழுக்காடு அதிகமாகும். இச்செலவின் காரணமாக அந்த விரைவு சாலை மலேசியாவிலேயே மிக அதிகச் செலவிலான நெடுஞ்சாலை என்று தேர்ந்தெடுக்கப்பட்ட டிஎபி பிரதிநிதிகள் மூன்றாண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தனர் என்று மைக்கல் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

மலிவான நெடுஞ்சாலை அமைப்பது குறித்து மாநில அரசு ஜேகேஆருடன் ஆலோசனை நடத்தியதா என்ற கேள்வியை லீ எழுப்பினார்.

ஹரப்பானின் முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் எல்லாம், குறிப்பாக பினாங்கு மாநில திட்டங்கள், அதே போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு செலவிடுவதைவிட குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் மைக்கல் லீ மேலும் கூறினார்.